கோவை முல்லை தற்காப்பு கலை மற்றும் பயிற்சி கழகத்தை சேர்ந்த கோகுல் கிருஷ்ணா தமிழ் பாரம்பரிய கலைகளான சிலம்பம், வாள், மான் கொம்பு வீச்சு கலைகளை தொடர்ந்து பதினோரு மணி செய்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தார்.
கோவை சின்ன வேடம்பட்டி மற்றும் சேரன்மாநகர் பகுதியிலுள்ள முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் ஐந்து வயது முதலான மாணவ, மாணவிகளுக்கு தமிழக பாரம்பரிய கலைகளான சிலம்பம், அடிமுறை, வேல்கம்பு, வாள்வீச்சு, வளரி மான்கொம்பு, சுருள்வாள், வாள்வீச்சு போன்ற பயிற்சிகள் பாரம்பரியம் மாறாமல் கற்றுத் தரப்பட்டு வருகிறது.

மேலும் இங்கு நன்கு பயிற்சி பெற்ற மாணவ, மாணவிகள் பலர் பல்வேறு உலக சாதனைகளை செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர்.
இந்நிலையில் இதே பயிற்சி கழகத்தில், பயிற்சி பெற்று வரும் கோவை சரவணம்பட்டி பகுதியை சேர்ந்த சுப்பு கிருஷ்ணன், லாவண்யா தம்பதியரின் மகன் கோகுல் கிருஷ்ணா, உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு ஒற்றை மற்றும் இரட்டை சிலம்பம், வாள் மற்றும் சுருள் வாள் வீச்சு, மான் கொம்பு வீச்சு என ஐந்து தமிழ் பாரம்பரிய ஆயுதங்களை பயன்படுத்தி ஒரே மேடையில் தொடர்ந்து பதினோரு மணி நேரம் செய்து சாதனை படைத்துள்ளார்.

பதினோரு வயது மட்டுமே ஆன சிறுவன் கோகுல் கிருஷ்ணா அதிகாலையில் ஐந்து மணிக்கு துவங்கி மாலை நான்கு மணி வரை செய்த இந்த சாதனை இந்தியா உலக சாதனை புத்தகம், அமெரிக்கன் மற்றும் யூரோப்பியன் உலக சாதனை புத்தகம் என மூன்று உலக சாதனை புத்தகங்களில் இடம் பிடித்தது.
சாதனை மாணவன் கோகுல் கிருஷ்ணாவிற்கு இந்தியா, யூரோப்பியன், அமெரிக்கன் உலக சாதனை புத்தகங்களின் கோவை மாவட்ட தலைவர் பிரகாஷ்ராஜ் கோப்பை, பதக்கம் மற்றும் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார்.
உலக பெற்றோர் தினத்தை முன்னிட்டு சிறுவன் கோகுல் செய்த இந்த சாதனையை அவரது பெற்றோர் உறவினர்கள் பள்ளி ஆசிரியைகள் என பலர் கலந்து கொண்டு கைகளை தட்டி உற்சாகபடுத்தினர்.
