எனது அப்பாவின் கனவை நனவாக்கிட, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என விருதுநகர் மக்களவைத் தொகுதி தேமுதிக வேட்பாளர் விஜயபிரபாகரன் பிரச்சாரம் செய்தார்.
தமிழகத்தில் மக்களவை தேர்தல் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் களைகட்டி வருகிறது. அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் விஜய பிரபாகரன் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார். இவர் தற்போது அருப்புக்கோட்டையில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி இன்றைய பிரச்சாரத்திற்கு முன்னதாக அருப்புக்கோட்டை புளியம்பட்டி ஆயிரங்கண் மாரியம்மன் கோவிலில் விஜய பிரபாகரன் சாமி தரிசனம் செய்தார்.
சமுதாய உறவின்முறை நிர்வாகிகளிடம் விஜய பிரபாகரன் தேர்தலில் ஆதரவு கோரினார். பாவடி தோப்பு, காந்தி மைதானம், திருநகரம், புதிய பேருந்து நிலையம், சின்ன பள்ளிவாசல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் திறந்த ஜீப்பில் முரசு சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். இந்த தேர்தலில் ஒரு இளைஞருக்கு நீங்கள் வாய்ப்பளியுங்கள். எனது தந்தை விஜயகாந்த் பிறந்தது ராமனுஜபுரம் தான். நமக்கான பந்தம் இன்னும் தொடர்கிறது. விட்டுப் போகவில்லை. இந்தத் தொகுதியில் 2 முறை வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் இந்த தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை. இங்கு நெசவாளர்கள் அதிகமாக உள்ளனர் அவர்களுக்காக ஜவுளி பூங்கா கொண்டுவரப்படும்.
இது என்னுடைய சொந்த ஊர். இங்கு நான் செய்யாமல் வேறு யார் செய்வார்கள். விஜயகாந்த் கனவை நனவாக்குவதற்காகதான் இத்தனை பெரிய பொறுப்பை கையில் எடுத்துள்ளேன். நான் மட்டும் செய்ய முடியாது. நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களித்து அதனை உண்மையாக்க வேண்டும் என ஆதரவு திரட்டினார். அங்கு பிறந்து இரண்டு மாதமான குழந்தைக்கு, விஜய ராமச்சந்திரன் என தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பெயர் சூட்டினார்.
அப்பாவின் கனவை நனவாக்கிட எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் : விஜயபிரபாகரன் பிரச்சாரம்
