சென்னை எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், மறுசீரமைப்பு பணிகள் நடைபெற உள்ளதால், இன்று முதல் வாகனங்கள் நிறுத்தும் பகுதி இடமாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையம் பல்வேறு நவீன வசதிகளுடன் மறுசீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, ரூ.734 கோடி செலவிடப்படுகிறது. மறுசீரமைப்பு பணியில் ரயில்நிலையத்தின் பிரதான நுழைவுவாயில் காந்தி இர்வின் சாலையிலும், பின்புற நுழைவுவாயில் பூந்தமல்லி நெடுஞ்சாலையிலும் அமைய உள்ளது.
மேலும், ரயில்நிலைய கட்டிடங்கள், காந்தி இர்வின் சாலை மற்றும் பூந்தமல்லி சாலை அருகே வணிக வளாகங்கள் அமைத்தல், புதிய பார்சல் அலுவலகம், நடைமேம்பாலம் உட்பட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தும் பகுதி உள்ளது. தற்போது இந்தப்பகுதியில் நடைபெற்றுவரும் ரயில்வே மறுசீரமைப்பு பணிகளால், மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி இன்று (பிப்.5) முதல் இடமாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:
எழும்பூர் ரயில் நிலையம் மற்றும் எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் தெற்கு ரயில்வேயின் பன்முக ஒருங்கிணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், எழும்பூர் மெட்ரோ ரயில் நிலையத்தில் உள்ள வாகன நிறுத்துமிடம், எழும்பூர் தெற்கு ரயில்வே பயணச்சீட்டு முன்பதிவு அலுவலகத்துக்கு பக்கத்தில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த இடமாற்றம் செய்யப்பட்ட வாகன நிறுத்துமிடத்தை அனைத்துபயணிகளும் இன்று (திங்கள்கிழமை) முதல் பயன்படுத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
எழும்பூர் மெட்ரோ ரயில் நிலைய வாகன நிறுத்தும் பகுதி இடமாற்றம்
