• Thu. Nov 20th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வந்தே பாரத் ரயிலை குமரிவரை நீட்டிக்க.., இளைஞர் காங்கிரஸ் கோரிக்கை…

ByKalamegam Viswanathan

Sep 27, 2023
சென்னை_நெல்லை இடையேயான வந்தே பாரத் ரயிலைக் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என குமரி கிழக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் டைசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “சென்னை_நெல்லை இடையே வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதை கன்னியாகுமரி வரை நீட்டிக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை. குமரிமாவட்டத்தில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் கல்வி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு காரணங்களுக்காக தலைநகர் சென்னைக்கு செல்கின்றனர்.

குமரி மாவட்டத்தில் இருந்து சென்னை செல்லும் பயணிகளுக்கு வசதியாக கன்னியாகுமரி, அனந்தபுரி, குருவாயூர்,அந்தியோதயா உள்ளிட்ட சில ரயில்கள் இயக்கப்பட்டு வந்தாலும்கூட, பயணிகள் முன்பதிவு டிக்கெட் கிடைக்காமல் தவிக்கும் நிலையே உள்ளது. அதிலும் குருவாயூர், அனந்தபுரி ரயில்கள் கேரளத்தில் இருந்து இயக்கப்படுவதால் அங்கேயே முன்பதிவு இருக்கைகள் அதிக அளவில் நிரம்பி விடுவதும் தொடர்கதையாகி வருகின்றது.

தமிழகத்தில் படித்தவர்கள் அதிகம் நிறைந்த மாவட்டம் என்பதால் குமரிமாவட்டத்தைச் சேர்ந்த பலரும் சென்னையில் பணிசெய்து வருகின்றனர். அவர்கள் ஒவ்வொருமுறையும் சொந்த ஊர் வந்து, திரும்ப ரயில் டிக்கெட் கிடைப்பதே பெரும் சிரமமாக உள்ளது.

மணிக்கு 110 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயிலை தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான கன்னியாகுமரிவரை நீட்டிப்பு செய்ய வேண்டும். வந்தேபாரத் ரயிலின் வேகத்தோடு ஒப்பிட்டால் கூடுதலாக 45 நிமிடங்கள் இயக்கினாலே போதும். அப்படிச் செய்வதன் மூலம் குமரிமாவட்டத்தில் இருந்து தலைநகர் சென்னைக்குச் செல்ல கூடுதலாக ஒரு ரயில்சேவை கிடைக்கும். குமரிமக்களின் சிரமமும் பெரும் அளவில் தீர்க்கப்படும்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.