• Sat. Jan 10th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!

Byவிஷா

Mar 29, 2023

திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி திருஆவினன்குடியில் பங்குனி உத்திரத் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சேவல், மயில் படங்கள் பொறிக்கப்பட்ட கொடிக்கு பூஜை செய்யப்பட்டு காலை 10. 45மணிக்கு மேல் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து அருள்மிகு முத்துக்குமாரசாமி -வள்ளி, தெய்வானை சமேதர் மற்றும் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
பத்துநாட்கள் நடைபெறும் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 6ம் நாள் திருவிழாவான வருகிற ஏப்ரல் 3ம்தேதியும், பங்குனி உத்திரத் தேரோட்டம் ஏழாம் நாள் திருவிழாவான வருகிற ஏப்ரல் 4ம்தேதி புதன்கிழமை அன்றும் நடைபெறுகிறது. 7ம் தேதியன்று கொடியிறக்கத்துடன் பங்குனி உத்திரத்திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவை முன்னிட்டு ஈரோடு மாவட்டம் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து பாதயாத்திரையாக வந்து பழனி ஆண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம். முதல் நாளான இன்று காசி, கயா, திரிவேணி சங்கமம், கொடுமுடி ஆகிய ஊர்களில் இருந்து புனித தீர்த்தங்கள் கொண்டுவந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகம் செய்து வருகின்றது. கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனி கோவில் அறங்காவலர் குழுவினர், இணை ஆணையர் நடராஜன், உதவி ஆணையர் லட்சுமி மற்றும் நகர முக்கிய பிரமுகர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.