• Thu. Nov 27th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

N4 திரை விமர்சனம்

Byதன பாலன்

Mar 24, 2023

சென்னை காசிமேடு பின்னணியில் உருவாகியுள்ள படம். அங்குள்ள காவல்நிலையத்தின் எண், என்4 என்பதால் படத்துக்கு இந்தப்பெயர்.

காவல்நிலையத்தின் பெயரை தலைப்பாக வைத்திருப்பதால் இது காவல்துறை சார்ந்த படமாக இருக்குமா? என்றால் இல்லை.காசிமேடு பகுதி வாழ் மக்களை அதிகார வர்க்கம் தம் சுயநலத்துக்காக எவ்வாறு பலி கொடுக்கிறார்கள்? என்பதைச் சொல்வதுதான் படம்.

மைக்கேல் தங்கதுரை, கேப்ரில்லா (இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சுந்தரியில் சுந்தரி), வினுஷா தேவி, அப்சல் அமீத் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். காசிமேடு மீன்வியாபாரிகளாகவே மாறி தங்களைக் கவனிக்க வைக்கிறார்கள்.பெற்றோர் இல்லாத அவர்களை சிறு வயதில் இருந்து பாதுகாத்து வரும் வடிவுக்கரசி பாத்திரம் அம்மக்களின் பிரதிநிதியாக அமைந்திருக்கிறது.

அக்‌ஷய்கமல், பிரக்யாநாக்ரா,அபிஷேக்சங்கர்,அழகு மற்றும் காவல்நிலைய ஆய்வாளராக வரும் அனுபமாகுமார் ஆகியோர் தத்தம் பாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள். அதிலும் அனுபமாகுமார் கதாபாத்திரம் எதார்த்த நிலையை எதிரொலித்து பதட்டப்பட வைக்கிறது.
திவ்யங்கின் ஒளிப்பதிவு காசிமேடு வரைபடத்தை இரத்தமும் சதையுமாக உலகத்துக்கு அறிமுகப்படுத்துகிறது.

பாலசுப்பிரமணியம்.ஜி யின் இசையில் பாடல்கள் கேட்கலாம். பின்னணி இசை அளவு.
டேனிசார்லஸ் படத்தொகுப்பில் முதல்பாதியில் இருக்கும் தொய்வை நிவர்த்தி செய்திருக்கலாம்.

வலியோர் சிலர் எளியோர் தமை
வதையே புரிகுவதா?
மகராசர்கள் உலகாளுதல்
நிலையாம் எனும் நினைவா?
என்கிற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் வரிகளுக்கு வடிவம் கொடுத்திருக்கிறார் இயக்குநர் லோகேஷ்குமார்.