• Fri. Apr 26th, 2024

ஏவுகனை நாயகனுக்கு 90 வது பிறந்த நாள்: குடும்பத்தினர் கலாம் நினைவிடத்தில் சிறப்பு பிரார்த்தனை

முன்னாள் குடியரசு தலைவரும், ஏவுகணை நாயகன், பாரத ரத்னா அப்துல் கலாமின் 90-வது பிறந்தநாளையொட்டி இன்று பேக்கரும்புவில் அமைந்துள்ள தேசிய நினைவகத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி நினைவகத்தில் பொது மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

ராமேஸ்வரத்தில் 1931 அக்.15ல் பிறந்த அப்துல் கலாம், விஞ்ஞானியாக உயர்ந்தார். அக்னி நாயகனான அவரின் திறமையை பாராட்டி நாட்டின் உயர் விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. இந்தியாவின் 11வது ஜனாதிபதியாக பொறுப்பேற்ற கலாம் தனது எளிமையால் மக்கள் ஜனாதிபதி என்றழைக்கப்பட்டார். மாணவர்கள், இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் திகழ்ந்தார்.

இந்நிலையில் 2015 ஜூலை 27 ல் அவர் மறைந்தார். அவரது உடலானது அவரது சொந்த ஊரான ராமேஸ்வரம் அருகே பேக்கரும்பு பகுதியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அப்துல்கலாம் நினைவிடத்தில் மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையின் சார்பில் மணிமண்டபம் கட்டப்பட்டு 2017 ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு அர்ப்பணித்தார்.

இந்நிலையில் இன்று அப்துல்கலாம் 90 வது பிறந்தநாளையொட்டி ராமேஸ்வரம் பேக்கரும்பில் அமைந்துள்ள அவரது நினைவிடம் வண்ண விளக்குகளாலும், மலர்களாலும் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இன்று காலை அப்துல்கலாமின் பேரன் சலீம் சேக், ராமேஸ்வரம் ஜமாத் தலைவர்கள் மற்றும் குடும்பத்தினர் கலாம் நினைவிடத்திற்கு வந்து சிறப்பு பிரார்த்தனை செய்தனர். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் காமாட்சி கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் அப்துல்கலாம் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் கலாம் தேசிய நினைவு வளகாத்தில் 100 மரகன்றுகள் நடும் நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் மரம் நட்டு துவக்கி வைத்தார்.

அப்துல் கலாமின் பிறந்த நாளையொட்டி அவரது நினைவகத்தில் அஞ்சலி செலுத்த வரும் பொது மக்களை கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசின் பாதுகாப்பு, ஆராய்ச்சி மேம்பாட்டு துறையினர் நினைவகத்திற்குள் அனுமதித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *