கோவாவில் லைராய் தேவி கோவில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
கோவாவில் உள்ள லைராய் தேவி கோவிலில் நேற்று முதல் சத்ரா திருவிழா தொடங்கியது. சத்ரா என்பது நெருப்பு சம்பந்தப்பட்ட சடங்குகளை உள்ளடக்கிய ஒரு வருடாந்திர திருவிழா ஆகும். இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பெரிய ஊர்வலமும் நடைபெறுவது வழக்கம்.

இன்று அதிகாலை நடந்த ஸ்ரீ லைராய் சத்ரா திருவிழா ஊர்வலத்தின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோவா, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலில் திரண்டிருந்தனர். விபத்துக்கான காரணம் விரிவான விசாரணைக்குப் பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் (ஜி.எம்.சி) மற்றும் மபுசாவில் உள்ள வடக்கு கோவா மாவட்ட மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் பிரமோத் சாவந்த் மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு நிலவரத்தை கேட்டறிந்தார். இருப்பினும், விபத்துக்கான காரணம் அல்லது இறந்தவர்களின் விவரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஊர்வலத்தின்போது அதிக கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் இந்த விபத்து நேரிட்டது என்றும், காயமடைந்த 30 பேரில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கோவா சுகாதார அமைச்சர் விஸ்வஜித் ராணே கூறினார். இந்த சடங்கிற்காக மட்டும் சுமார் 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கூட்டத்தின் நகர்வுகளை கண்காணிக்க ட்ரோன்களும் பயன்படுத்தப்பட்டன. இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தும் விபத்து நேரிட்டது குறித்து தெளிவான தகவல் இல்லை.