லண்டனில் இருந்து நேற்று பிற்பகலில் புறப்பட்டு, இன்று அதிகாலை 3.30 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானமும், அதைப்போல் சென்னையில் இருந்து அதிகாலை 5.30 மணிக்கு, லண்டனுக்கு புறப்பட்டுச் செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், ஆகிய 2 விமானங்கள், இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன.
இந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானத்தில், லண்டன் பயணிகள் மட்டுமின்றி பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, சுவிஸ்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு செல்லும் பயணிகளும் இருந்தனர். சென்னையில் இருந்து லண்டன் செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில், இன்று சுமார் 300 -க்கும் மேற்பட்ட பயணிகள் பயணிக்க இருந்தனர்.

இந்த நிலையில் லண்டனிலிருந்து புறப்பட்டு வரவேண்டிய விமானமே வரவில்லை என்பதால், சென்னையில் இருந்து இன்று லண்டன் புறப்பட்டு செல்லும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து என்று பயணிகளுக்கு, நேற்று இரவு தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. இதனால் பெரும்பாலான பயணிகள் விமான நிலையத்திற்கு வரவில்லை. தகவல் கிடைக்காத சில பயணிகள் விமான நிலையத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.
அதைப்போல் சென்னையில் இருந்து இன்று காலை 6 மணிக்கு, தூத்துக்குடி செல்லும் தனியார் ஸ்பைஜெட் பயணிகள் விமானமும், தூத்துக்குடியில் இருந்து இன்று பகல் 1.45 மணிக்கு, சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஜெட் தனியார் பயணிகள் விமானம் ஆகிய 2 விமானங்கள் இன்று திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் இந்த விமானங்களில் பயணிக்க இருந்த பயணிகளும் அவதிக்குள்ளானார்கள்.
தூத்துக்குடிக்கு இந்த ஸ்பைஸ்ஜெட் ஏர்லைன்ஸ் தனியார் பயணிகள் விமானம், கடந்த 30 ஆம் தேதியில் இருந்து தான், புதிதாக விமான சேவையை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் விமான சேவை தொடங்கி இரண்டு நாட்களிலேயே, விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது, பயணிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நிர்வாக காரணங்கள் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவித்து விட்டதாகவும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.
தூத்துக்குடி செல்லும் விமானம் ரத்து குறித்து அந்த நிறுவனமும் நிர்வாக காரணம் காரணமாக விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த விமானத்தில் செல்ல இருக்கும் பயணிகள் இன்று பிற்பகல் விமானத்தில், சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள் என்றும் அறிவித்துள்ளது என்று தெரிவிக்கின்றனர்.