கோவையில் தொழில் அதிபரிடம் 300 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து சுமார் 3.20 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகளை கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
கோவையை சேர்ந்த சிவராஜ் என்பவர் பீளமேடு பகுதியில் மின் காற்றாலை அலுவலகத்தை நடத்தி வருகிறார்.தொழில் அதிபரான இவரது அலுவலகத்தில் பணிபுரிந்த 13 பேர் சிவராஜ்க்கு சொந்தமான சுமார் 200 கோடி ரூபாய் சொத்துக்களுக்கு போலி ஆவணம் தயார் செய்தும் 100 கோடி ரூபாய் பணத்தையும் மோசடி செய்துள்ளனர்.

மோசடி செய்ததை அறிந்த சிவராஜ் கோவை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலிசார் மோசடியில் ஈடுபட்ட வசந்த்,சிவகுமார்,ஷீலா, தீக்ஷா ,சக்தி சுந்தர் என மொத்தம் ஐந்து பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.இதனை தொடர்ந்து குற்றவாளிகளை காவலில் எடுத்து விசாரித்த கோவை மாநகர குற்றப்பிரிவு காவல் துறையினர் ஏற்கனவே கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சுமார் 12 கோடி ரூபாய் பணம், 100கோடி ரூபாய் மதிப்பிலான முக்கிய ஆவணங்களை போலீசார் கைப்பற்றி, வங்கி கணக்குகளை முடக்கம் செய்தனர்.

இதனை தொடர்ந்து கைது செய்யப்பட்டவர்களின் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 480 பவுன் தங்கம் மற்றும் வைர நகைகளை போலீசார் கைப்பற்றியுள்ளனர். இந்த நகைகளை கோவை நீதிமன்றத்தில் இன்று ஒப்படைத்தனர்.சுமார் 3.20 கோடி மதிப்புள்ளான நகைகள் சரிபார்க்கப்பட்டு கருவூலத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் நில மோசடியில் ஈடுபட்ட அனைத்து ஆவணங்களையும் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.தொடர்ந்து கோவை மாநகர குற்றப்பிரிவு போலீஸ் சார் மோசடி குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
