நாகையிலிருந்து கடலுக்கு மீன் பிடிக்க சென்ற 2 மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில் மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடற்படை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
நாகை அக்கரைபேட்டை திடீர் குப்பத்தை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது 57). இவர் நேற்றிரவு தனக்கு சொந்தமான பைபர் படகில் மீன் பிடிக்க கடலுக்கு சென்றார். இன்று கண்ணதாசன் கரை திரும்பியிருக்க வேண்டிய சூழலில் இதுவரை கரை திரும்பாமல் பைபர் படகுடன் மாயமாகி விட்டார். இதையடுத்து அக்கரைப்பேட்டையில் இருந்து 5 படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்கள் மாயமான கண்ணதாசனை தேடும் பணியில் ஈடுபட்டனர். நீண்ட நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது குறித்து மீன்வளத் துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து மீன்வளத்துறையினர் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவர்கள் கடலில் மாயமான கண்ணதாசனை கடற்படை கப்பல் மூலம் தேடி வருகின்றனர்.
அதேபோல நாகூர் சம்பா தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் (52) இவர் கடந்த 14-ந்தேதி நாகை மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து விசைப்படகில் 11 மீனவர்களுடன் மீன்பிடிக்க கடலுக்கு சென்றார்.
ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது மாணிக்கம் நிலை தடுமாறி கடலில் விழுந்துவிட்டார் . இதை அறிந்த விசைப்படையில் இருந்த சக மீனவர்கள் வாக்கி டாக்கி மூலம் மீன்வளத் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து மீன்வளத்துறை தெரிவித்த தகவலின் பேரில் இந்திய கடற்படையினர் கடலில் தவறி விழுந்த மாணிக்கத்தை கப்பல் மூலம் தீவிரமாக தேடி வருகின்றனர் .
கடலுக்கு மீன் பிடிக்க சென்ற நாகை மீனவர்கள் அடுத்தடுத்து மாயமான சம்பவம் மீனவ கிராமங்களில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

.