கோவில்பட்டி அருகே ஓடும் ரயிலில் ஆசிரியையிடம் 10 பவுன் நகைகள் திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் அருள்ஜோதி (54). இவர் அப்பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவர் கன்னியாகுமரியில் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்று விட்டு கன்னியாகுமரி- ராமேசுவரம் ரயிலில் ஊருக்கு வந்து கொண்டு இருந்தார்.

ரயிலில் தூங்கிய அவர், விருதுநகர் வந்தபோது திடீரென கண் விழித்தார். அப்போது அருகில் வைத்திருந்த தனது கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அந்த பையில் மாெத்தம் 9½ பவுன் எடையில் தங்கச்சங்கிலிகள், செல்போன் மற்றும் ரூ.1,500 ஆகியவை இருந்ததாக சக பயணிகளிடம் கூறினார். பின்னர் அனைவரும் பையை தேடினர். ஆனால் கிடைக்கவில்லை.
இதுகுறித்து அவர், விருதுநகர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் ரயில் நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். ரயிலில் ஆசிரியை அருள் ஜோதியின் நகைகளை திருடியது தொடர்பாக கோவில்பட்டியை சேர்ந்த வள்ளி முத்துப்பாண்டியனை (45), அங்குள்ள மந்திதோப்பு பகுதியில் ரயில்வே போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த நகைகளை மீட்ட போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.”








