மதுரை ஆதீனம் 292வது குருமகா சன்னிதானம் அருணகிரிநாதர் திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சற்று முன்பு காலமானார்.
திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மடமாகவும், தமிழகத்திலேயே மிகவும் பழமையான சைவ மடங்களிலேயே கருதப்படுவது மதுரை ஆதீனமும் ஒன்று. இந்த மடத்தின்கீழ் தஞ்சை மாவட்டம் கஞ்சனூர் அக்னீஸ்வர சுவாமி கோயில், திருப்புறம்பியம் காசிநாத சுவாமி கோயில், கச்சனம் கைசின்னேஸ்வர சுவாமி கோயில் உள்ளிட்ட பல கோயில்கள் உள்ளன. இந்த ஆதீனத்துக்குச் சொந்தமாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உள்ளன.
இந்த ஆதீனத்தின் 292வது குருமகா சன்னிதானமான அருணகிரிநாதருக்கு வயது முதிர்வு காரணமாக கடந்த 9-ம் தேதி திடீர் என உடல்நிலையில் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். நேற்று காலை அவரது உடல்நிலை கவலைக்கிடமானது. மருத்துவர்கள் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தெரிவித்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி சற்று நேரத்திற்கு முன்பு அவர் காலமானார். 77 வயதில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த ஆதீனத்தின் திடீர் மறைவு தமிழக மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.