
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரகாஷ் ராஜ். ஹீரோ, வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என பல்வேறு மொழிகளில் சிறந்த நடிகராக வலம் வருகிறார். சமீபத்தில் நவரசாவின் எதிரி படத்தில் சிறிது நேரமே வந்தாலும் பிரகாஷ் ராஜின் மிரட்டலான நடிப்பை பார்த்து ரசிகர்கள் வியந்து போயுள்ளனர். அடுத்தடுத்து கைவசம் ’சிறுத்தை’ சிவாவின் ‘அண்ணாத்த’, பிரஷாந்த் நீலின் ‘கேஜிஎஃப் 2’, மணிரத்னத்தின் ‘பொன்னியின் செல்வன்’, அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா’, கார்த்திக் நரேனின் ‘மாறன்’, மித்ரன் ஜவகர் இயக்கத்தில் ’திருச்சிற்றம்பலம்’ உள்ளிட்டப் படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று பிரகாஷ் ராஜ் வீட்டில் இருக்கும்போது சறுக்கி விழுந்துள்ளார். சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்ட பிரகாஷ் ராஜுக்கு, கையின் தோள்பட்டையில் சிறிய எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து அறுவை சிகிச்சைக்காக ஐதராபாத் புறப்பட்டுச் சென்றுள்ளார்.

இதுகுறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ள பிரகாஷ் ராஜ், ‘லேசா விழுந்துட்டேன், சின்ன எலும்பு முறிவு, ஹைதராபாத்திற்கு பறக்கிறேன். அங்கே என் நல்ல மருத்துவ நண்பர் குருராவா ரெட்டியின் பாதுகாப்பான கரங்களில் சிகிச்சை பெற்று சீக்கிரமே திரும்பி வருவேன்’ என பதிவிட்டுள்ளார். இதனைக் கண்ட ரசிகர்கள் நல்ல படியாக சர்ஜரி முடிந்து, நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென சோசியல் மீடியாவில் வாழ்த்து கூறி வருகின்றனர்.
