• Mon. Jan 20th, 2025

கெத்து காட்டும் சார்பட்டா பரம்பரை…

Byadmin

Aug 4, 2021

சமீபத்தில் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கி வெளிவந்த படம் சார்பட்டா பரம்பரை. மெட்ராஸ் படத்திற்கு பிறகு வடசென்னை மக்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து வெளிவந்துள்ள இந்த படத்தில் நமது மண்ணின் தமிழ் குத்துச்சண்டை வீரர்களை பற்றிய படம்.

இந்த படத்தில் இன்னொரு அம்சம் 1975ல் பிரதமர் இந்திரா காந்தி ஆட்சியின் போது அமுல்படுத்தப்பட்ட நெருக்கடி நிலையையும் திமுக ஆட்சியையும் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. படம் துவக்கம் முதல் இறுதி வரை அலுப்பு தட்டாமல் போகிறது. ஆண்கள் ரசிக்ககூடிய படமாக உள்ளது என்பது மைனசாக உள்ளது. ஆனால் சாதாரண ஏழை தலித் குத்துச்சண்டை வீரர்களைப் பற்றிய படம் என்பதால் இன்னும் கவனிக்கப்பட வேண்டிய படமாக உள்ளது. பா.ரஞ்சித் சம்மந்தமிலலாமல் பேசி மாட்டிக்கொள்வதை விடுத்து இது போன்ற படங்களை மக்கள் மத்தியில் பேசி விவாதிக்க வைக்கலாம்.


படத்தின் நாயகனான ஆர்யா கபிலன் என்ற கதாபாத்திரத்தில் வருகிறார். அவருக்கு பயிற்சியாளராக வாத்தியாராக பசுபதி வருகிறார். ஆர்யாவின் ஆக்ரோசமும், பசுபதியின் அமைதியான நடிப்புமே படத்தின் பிளஸ் பாயிண்ட். சார்பட்டா பரம்பரையின் திறமையான பயிற்சியாளராக சார்பட்டா பரம்பரையை காப்பாற்ற பாடுபடும் பயிற்சியாளராக பசுபதி அன்றைய காலக்கட்டத்தில் அப்பகுதி திமுக தலைவராக விளங்குகிறார்.


வெள்ளைக்காரர்கள் ஆட்சியின் போது வடசென்னை வியாசர்பாடி வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட பல பகுதிகளில் வாழ்ந்த ஒருவருக்கு வெள்ளைக்காரர்கள் பொழுது போக்காக கற்றுத் தந்த பாக்சிங் கலையை சார்பட்டா பரம்பரை காப்பாற்றி வருகிறது. பிற்காலத்தில் சார்பட்டா பரம்பரையிலிருந்து இடியாப்ப பரம்பரை பிரிகிறது. இந்த இரண்டு பரம்பரையில் சாதிய பிரச்சனை இல்லை. ஆனால் பரம்பரை ஜெயிக்க வேண்டும் என்ற வெறி தான்.

ஆனால் அதற்குள்ளும் தலித் பகுதியிலிருந்து வரும் கதையின் நாயகன் ஆர்யாவை அங்கீகரிக்காத போக்கு. படத்தின் மிக முக்கியமான காட்சியாக ஆர்யாவிற்கும் டான்சிஸ் ரோஸ் என்ற குத்துச்சண்டை வீரருக்கும் நடைபெறும் சண்டை. சார்பட்டா பரம்பரை வீரர்கள் எல்லா நிலைகளிலும் வெற்றி பெற்றாலும் இடியாப்ப பரம்பரையில் முக்கியமான வேம்புலி வீரனை வெல்ல முடியாத நிலையில் ஆர்யா முன்னிருத்த டான்சிங் ரோசுடன் சண்டையிட்டு வெற்றி பெற்ற பிறகு வேம்புலியுடன் மோதும் சமயத்தில் வேம்புலி தோல்வியை தழுவும் சமயத்தில் பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டு கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சி கலைக்கப்படுகிறது.

ஆனாலும் போட்டி தொடர்கிறது. இந்நிலையில் வேம்புலியை நாக்அவுட் செய்யும் போது வேம்புலியின் கண் அசைவுக்காக காத்திருந்த ரவுடிகள் ஆர்யா மீது நாற்காலியை வீசி எறிந்து கலவரத்தில் ஈடுபடுகிறார்கள். அதே சமயம் பசுபதி கைது செய்யப்படுகிறார். ஆர்யாவின் அண்டர்வேர் கிழிக்கப்பட்டு அவமானப்படுத்தப்படுகிறார். அதன் பிறகு நெருக்கடி நிலை காலத்தில் எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள் ஆர்யாவை கைக்குள் போட்டுக்கொண்டு சாராயம் காய்ச்சும் தொழிலில் ஈடுபடுகிறார்கள்.

குடிக்கு அடிமையாக ஆர்யா தனது கட்டுமஸ்மான உடலை இழந்துவிடுகிறார். அதன் பிறகு பசுபதி விடுதலையாகி வந்த பிறகு மீண்டும் ஆர்யா தனது உடலை தயார் செய்து கொண்டு வேம்புலியுடன் மோதி வெற்றி பெறுவது தான் கதை. படத்தில் எம்.ஜி.ஆரின் கட்சிக்காரர்கள் குறித்து காட்சிகள் இடம் பெற்றதற்காக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக தலைவராக வரும் பசுபதியை பெருமைபடுத்தும் காட்சிகளுக்காக உதயநிதி ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் வசூல் அள்ளும் படமாக மாறியிருக்கும். மேலும் பிரபலமாகியிருக்கும். அனைவரும் பார்க்க வேண்டிய அற்புதமான படம் சார்பட்டா.