

சர்ச்சை என்ற சொல்லையும் மீரா மிதுனையும் எப்போதுமே பிரிக்கவே முடியாது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த புகழை நல்ல விஷயங்களுக்கு பயன்படுத்திக் கொள்ளாமல் சோசியல் மீடியா மூலமாக வேண்டாத பல காரியங்களைச் செய்து வருகிறார். கடந்த ஆண்டு கோலிவுட் நடிகர்களான விஜய், சூர்யா மற்றும் அவர்களது மனைவிகளான சங்கீதா, ஜோதிகா குறித்து அவதூறாகவும், தரக்குறைவாக பேசியது சர்ச்சையை கிளப்பியது. ஒட்டுமொத்த திரையுலகமே மீராமிதுனின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து சமீபத்தில் நான் திருந்திவிட்டேன், விஜய், சூர்யாவை பற்றி பேசியதெல்லாம் தப்பு என முதலைக் கண்ணீர் வடித்து வீடியோ வெளியிட்டார்.
தற்போது தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் குறித்து மிகவும் தரக்குறைவாக பேசி மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. இதையடுத்து மீரா மிதுன் மீது சென்னை, திருவள்ளூர், மதுரை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களிலும் புகார்கள் குவிந்தன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல்துறையில் நேற்று புகார் அளித்திருந்தார். இதன் அடிப்படையில் மீரா மிதுன் மீது 32/2021 U/s 153,153A(1) (a),505 (1) (b),505 (2) IPC and section 3(1) (r),3(1)(s), (3)(1) (u) of sc &ST Prevention Act 1989-ன் ஆகிய 7 பிரிவுகளின் கீழ் சைபர் க்ரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மீரா மிதுனை விரைவில் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.

