• Mon. May 20th, 2024

ரேஷன் கடையை சேதப்படுத்தி சென்ற காட்டு யானைகள்…

BySeenu

Dec 5, 2023

கோவை மாவட்டத்தில் தடாகம், மருதமலை, மாங்கரை, பெரியநாயக்கன்பாளையம், தொண்டாமுத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. தடாகம் மாங்கரை பகுதிகளில் வனப்பகுதிகளில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி வருவது தொடர் கதையாகி வருகிறது. சில சமயங்களில் ஊருக்குள் புகும் காட்டி யானைகள் ரேஷன் கடைகளை சேதப்படுத்தி அரிசி உள்ளிட்ட பொருட்களை உண்டு செல்கிறது.

இந்நிலையில் இன்று தடாகம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் அதிகாலை சுமார் மூன்று மணியளவில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகள் நஞ்சுண்டாபுரம் நியாய விலை கடையை சேதப்படுத்தி அரிசியை சர்க்கரையை உண்டுள்ளது. இதனை பார்த்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியுள்ளனர்.

இது குறித்த பகுதி மக்கள் கூறுகையில், இப்பகுதியில் நாள்தோறும் காட்டு யானைகள் வருவதாகவும், அவ்வாறு வரும் காட்டு யானைகள் விளைநிலங்களை சேதப்படுத்துவதாக தெரிவித்தனர். வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினாலும் மீண்டும் வெளியேறி விடுவதாகவும் தெரிவித்தனர். இந்த ஒரு வருடத்தில் மட்டும் சுமார் மூன்று முறை இந்த ரேஷன் கடையை யானைகள் சேதப்படுத்தி உள்ளதாக தெரிவித்தனர்.

இது குறித்து பேசிய ரேஷன் கடை பணியாளர் அமுதா, நேற்று வந்த யானை கூட்டம் சர்க்கரை மற்றும் அரிசியை சேதப்படுத்தி சென்றதாகவும் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு வந்த யானைகள் ஜன்னல்களையும் சேதப்படுத்தி சென்றதாக தெரிவித்தார். வனத்துறையினர் வந்து ஆய்வு மேற்கொண்டு கடிதம் தருவதாகவும் அதனை அரசாங்கத்திடம் தொடர்ந்து அளித்து வந்தாலும் தற்போது வரை எந்த ஒரு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்படவில்லை என தெரிவித்தார். நேற்று வந்த யானைகள் 25 கிலோ சர்க்கரை 20 கிலோ அரிசியை சேதப்படுத்தி சென்றதாகவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *