திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.

கோவை வந்த குடியரசு துணைத் தலைவரை மாநில அமைச்சர் முத்துசாமி, மாவட்ட ஆட்சியர் பவன்குமார், மாநகர காவல் ஆணையாளர் கண்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.அதனைத் தொடர்ந்து கோவை விமான நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் சார்பில் குடியரசுத் துணைத் தலைவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய குடியரசுத் துணைத் தலைவர் பொங்கல் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
பொங்கல் திருநாள் என்பது விவசாய பெருமக்கள் அறுவடை முடிந்து ஆனந்தமாக இல்லங்களில் மட்டுமல்லாமல் ஊரே கூடி மகிழ்ந்திருப்பது தான் பொங்கல் திருநாள் என தெரிவித்தார். இதில் எந்த பேதத்திற்கும் இடமில்லை எனவும் குறிப்பிட்டார். சூரியனை வழிபடும் நாளாக அது அமைந்தாலும் இயற்கை தந்த வரங்களுக்கெல்லாம் நன்றி சொல்லுகின்ற தமிழ் விழாவாக அது அமைந்துள்ளது உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் என மீண்டும் தெரிவித்தார். மேலும் பிற பகுதிகளில் வாழக்கூடிய விவசாய பெருமக்களுக்கு சங்கராந்தி வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.
சினிமாவிலும் மத்திய அரசு தலையீடு உள்ளது என்ற கருத்துக்கள் பரவி வருவது தொடர்பான கேள்விக்கு, பதில் அளிக்கவில்லை. நொய்யலாறு சம்பந்தமான கேள்விக்கு, நொய்யல் ஆறை மீட்க வேண்டும் புதுப்பித்து எடுக்க வேண்டும் என்பதுதான் இந்த பகுதி மக்களின் எண்ணமாக இருப்பதாக குறிப்பிட்ட அவர் நொய்யல் ஆற்றை மீட்பது என்பது தஞ்சை விவசாய மக்களுக்கு நாம் செய்யக்கூடிய மிகப்பெரிய பேராக அமையும் என தெரிவித்தார்.திருப்பூரில் இன்று இரவு தங்கும் குடியரசுத் துணைத் தலைவர், நாளை தனது இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து கோவை சிட்ரா சாலையில் உள்ள கே.எம்.சி.ஹெச் மருத்துவமனையில் புதிய கட்டிடம் திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்கிறார்.

பின்னர் கொடிசியா அரங்கில் நடைபெறும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.இதனை அடுத்து இரவு 7 மணி அளவில் கோவை விமான நிலையத்தில் இருந்து டெல்லி புறப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குடியரசு துணைத் தலைவர் வருகைய ஒட்டி கோயம்புத்தூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் குடியரசுத் துணைத் தலைவர் கலந்துகொள்ளும் நிகழ்விடங்களை சுற்றி ட்ரோன் பறக்க விட இரண்டு நாட்களுக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கோவை விமான நிலையம், கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை மற்றும் கொடிசியா வளாகம் ஆகியவை முழுவதுமாக மத்திய பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளது.




