விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே நதிக்குடி கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஒருவர் பட்டா மாறுதல் கோரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.

அப்போது பட்டா மாறுதலுக்கு ஒப்புதல் வழங்க கிராம நிர்வாக அலுவலர் சக்தி கணேஷ் மற்றும் தலையாரி முருகன் ஆகியோர் 4000 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. பின்னர் பட்டா மாறுதல் விண்ணப்பத்தின் நிலை குறித்து கேட்க சென்ற கூலி தொழிலாளியிடம் தலையாரி 4 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். தன்னால் அவ்வளவு பணம் தர இயலாது என கூலி தொழிலாளி கூற, பேரம் பேசி 2000 ரூபாய் வழங்க வற்புறுத்திய நிலையில் அன்றாட வேலை பார்த்து பிழைப்பை நடத்தி வரும் தன்னால் எப்படி 2000 ரூபாய் கொடுக்க முடியும் என புலம்பியுள்ளார்.

இருப்பினும் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே பட்டா மாறுதல் விண்ணப்பம் ஒப்புதல் அளிக்கப்படும் எனவும் எல்லோரிடமும் பணம் பெற்றுத்தான் பட்டா மாறுதல் ஒப்புதல் அளிப்பதாகவும் வேண்டும் என்றால் ஏற்க்கனவே லஞ்சம் கொடுத்தவர்களிடம் கூட கேட்டுக்கொள்ளுங்கள் என தலையாரி கூறியதால் வேறு வழியின்றி தன்னிடமிருந்து 500 ரூபாயை கூலித்தொழிலாளி கொடுக்க 500 ரூபாய் லஞ்ச பணத்தைப் பெற்றுக் கொண்ட தலையாரி முருகன், மீதம் 1500 ரூபாயை விரைவில் வழங்க வேண்டும் என பேரம் பேசும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த வீடியோ விவகாரம் குறித்து வெம்பக்கோட்டை வட்டாட்சியர் கலைவாணியிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது இது குறித்து தமக்கு எந்த புகாரும் வரவில்லை எனவும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.