இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் சர்தார் வல்லபபாய் படேல் அவர்களின் 150வது பிறந்த நாள் விழாவைக் கொண்டாடும் வகையில், மத்திய அரசின் இளைஞர் நலம் விளையாட்டு அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

சர்தார் @ 150 எனும் தலைப்பில் இந்நிகழ்வுகள் அனைத்தும் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்வுகள் கடந்த அக்டோபர் 6ம் நாள் மாண்புமிகு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியாஜி அவர்களால் காணொளி வாயிலாக தொடங்கி வைக்கப்பட்டது. இக் கொண்டாட்டத்தின் முன் நிகழ்வுகளாக இளையோருக்கான கட்டுரைப் போட்டி வினாடி வினா மற்றும் ஓவியம் போன்ற பலவேறு போட்டிகள் இணையதளம் வாயிலாக நாடு முழுவதும் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து அக்டோபர் 31ம் நாள் முதல் நவம்பர் 25ம் நாள் வரை, நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் ஒற்றுமை பாதயாத்திரைகள் (Unity March) நடைபெறுகின்றன.

அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் எனது இளைய பாரதம் (மை பாரத் ) மற்றும் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில், கந்தர்வகோட்டையில் மாபெரும் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. அக்கச்சிப்பட்டி அருகில் உள்ள வெள்ளை முனீஸ்வரர்கோவில் திடலில் இப்பேரணிக்கான துவக்க விழா நடைபெற்றது. நமது பாரம்பரிய பெருமைகளை உணர்த்தும் சிலம்பம் கரகம், மாடாட்டம், மயிலாட்டம் போன்ற பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன், சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து, அனைவரும் சுய சார்பு (ஆத்மநிர்பார்) உறுதிமொழியேற்று, பேரணி துவங்கியது. புதுக்கோட்டை எனது இளைய பாரதம் திட்ட உதவி அலுவலர் நமச்சிவாயம் முன்னிலையில் கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இளையராஜா கொடியசைத்து பேரணியைத் துவக்கி வைத்தார்.
இந்த ஒற்றுமைப் பேரணியில் பள்ளி, கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களும், இளையோரும், பொதுமக்களும் என சுமார் 500 பேர் பங்கேற்றனர். பேரணி செல்லும் வழியில் மகாத்மா காந்தி மற்றும் டாக்டர் அம்பேத்கர் ஆகியோரின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. பங்கேற்ற இளையோர் அனைவரும் நமது தேசியக் கொடியுடன் தேசிய ஒற்றுமை, சுய சார்பு மற்றும் போதை ஒழிப்பு ஆகிய கருத்துக்களை வலியுறுத்தும் பதாகைகள் மற்றும் சர்தார் வல்லப்பாய் படேல் அவர்களின் திருவுருவம் மற்றும் மை பாரத் ஆகிய பதாகை களுடனும் பேரணியில் பங்கேற்றனர்.
கந்தர்வகோட்டை பேருந்து நிலையம் வழியாக வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்கு பேரணி சென்றடைந்தது. அங்கு பேரணியில் பங்கேற்ற அனைவரும் போதை தவிர்த்தல் உறுதி மொழி ஏற்றனர். நிகழ்ச்சியில் நேரு யுவ கேந்திராவின் முன்னாள் தேசிய இளையோர் தொண்டர் திருமதி. விஜயலெட்சுமி. கந்தர்வகோட்டை ஊராட்சி செயலாளர் அறிவுடை நம்பி, நேரு இளைஞர் நற்பணி மன்ற முன்னாள் தலைவர் முத்து ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சி முன்னதாக விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் திரு. செல்வகுமார் வரவேற்றார். நிறைவாக மை பாரத் தேசிய இளையோர் தொண்டர் திரு திருமணி அனைவருக்கும் நன்றி கூறினார். நிகழ்ச்சியை கவிஞர் கவின் பாரதி தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியை மை பாரத் இளையோர் தொண்டர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.






; ?>)
; ?>)
; ?>)
