• Fri. May 3rd, 2024

திமுகவைப் போல் பாஜக.வில் வாரிசு அரசியல் இல்லை – வானதிஸ்ரீனிவாசன்..!

Byவிஷா

Oct 19, 2023

திமுகவைப் போல் வாரிசு அரசியல் பாஜக.வில் இல்லை என வானதிஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, “காங்கிரஸ் கட்சியில் வாரிசு அரசியல் இருப்பதாக பாஜக குற்றம்சாட்டுகிறது. ஆனால், அமித்ஷா மகன், ராஜ்நாத் சிங்கின் மகன் என்ன செய்கிறார்? அனுராக் தாக்கூர் எப்படி முக்கியத்துவம் பெற்றார்? இவையெல்லாம் வாரிசு அரசியல் இல்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக பாஜக மகளிரணி தேசிய தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் வாரிசு அரசியலை பாஜக அம்பலப்படுத்தும் போதெல்லாம், பாஜக தலைவர்களது குடும்பத்தில் ஒரு சிலர் அரசியலில் இருப்பதை எதிர்வாதமாக முன் வைப்பதை வாரிசு தலைமை கட்சிகள் வழக்கமாகக் கொண்டுள்ளன. ராகுலும் அதைத்தான் செய்திருக்கிறார். பாஜக மீதும் வாரிசு அரசியல் பழியை சுமத்த முயற்சித்திருக்கிறார்” என்று விமர்சித்துள்ளார்.
ஆனால், தந்தையின் இடத்தில் மகன், மகளை அமர்த்துவது, தந்தையின் அதிகாரத்தை மகன், மகளுக்கு அப்படியே மாற்றுவது அதாவது காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி), தலைமைச் செயலாளர் பதவிகளுக்கு எடுத்த எடுப்பிலேயே ஒருவரை நியமிப்பது போல, கட்சித் தலைவர், முதலமைச்சர், பிரதமர் பதவிகளுக்கு வாரிசுகளை அமர்த்துவதுதான் வாரிசு அரசியல். இது ஜனநாயகம், சமத்துவம், சமூக நீதிக்கு எதிரானது. சர்வாதிகார ஆட்சிக்கு வழிவகுக்கக் கூடியது. இதுதான் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட ‘இண்டி’ கூட்டணி கட்சிகளில் நடக்கிறது. இதை எதிர்க்க வேண்டாமா?
ஜவஹர்லால் நேரு – இந்திரா – ராஜிவ் – சோனியா – ராகுல் – பிரியங்கா, கருணாநிதி – மு.க.ஸ்டாலின் – உதயநிதி ஸ்டாலின், முலாயம் சிங் – அகிலேஷ் யாதவ், லாலு பிரசாத் யாதவ் – தேஜஸ்வி யாதவ், சரத்பவார் – சுப்ரியா சுலே, ஷேக் அப்துல்லா – பரூக் அப்துல்லா – உமர் அப்துல்லா, முப்தி முகமது சயீத் – மெகபூபா முப்தி, பால் தாக்கரே – உத்தவ் தாக்கரே – ஆதித்ய தாக்கரே இப்படி அப்பா – மகன் – மகள் – பேரன் – பேத்தி – கொள்ளுப் பேரன் – பேத்தி என மன்னராட்சி போல, அதிகாரம் கை மாறுவதையும், இப்படிப்பட்ட கட்சிகளில் மற்றவர்கள் வாரிசு தலைமைக்கு அடிமை போல இருப்பதையும் தான் பாஜக எதிர்க்கிறது. விமர்சிக்கிறது என்று வானதி சீனிவாசன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *