• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிறந்து 2 நாளான குழந்தையை விற்க முயற்சி -4 பெண்கள் கைது.!!!

ByKalamegam Viswanathan

Mar 29, 2023

மதுரையில் பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை விற்க முயன்றபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சிகிச்சைக்கு அரசு மருத்துவமனைக்கு வந்தபோது உண்மை வெளியானது.
மதுரை அரசு மருத்துவமனை பச்சிளம் குழந்தைகள் சிகிச்சைப் பிரிவுக்கு பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை மார்ச் 25-ம் தேதி 60 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சிகிச்சைக்கு கொண்டு வந்தார். அப்போது, செவிலியர்கள் குழந்தைக்கும் பெண்ணுக்கும் வயது வேறுபாடு அதிகமாக இருந்ததால் சந்தேகத்தின் பேரில் குழந்தையின் தாய் யார் என கேட்டனர். அதற்கு அந்தப் பெண் முன்னுக்குப் பின் முரணாகப் பேசினார். திருடிய குழந்தையாக இருக்கலாம் என்று போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை காவல்நிலைய போலீஸார் அந்த பெண்ணிடம் விசாரித்தனர். அவர் உசிலம்பட்டி கக்காரன்பட்டி ஒத்தவீடு பகுதியைச் சேர்ந்த பாண்டியம்மாள் என தெரிந்தது. குழந்தையை அவரது தாயே விற்கக் கொடுத்ததாகவும், குழந்தைக்கு உடல்நலம் சரியில்லாததால் சிகிச்சை அளித்துவிட்டு விற்க முயற்சி செய்யலாம் என நினைத்ததாகவும் தெரிவித்தார்.


இதையடுத்து, குழந்தையின் தாயிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். தொடர்ந்து, குழந்தையை ஆனையூரில் கொண்டு வந்து கொடுத்த அன்னமார்பட்டி மாலதி, பாண்டியம்மாள் (60), அவரது மகள் அழகுபாண்டியம்மாள் (40), மற்றொரு பாண்டியம்மாள் (45) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: பிறந்து 2 நாட்களே ஆன குழந்தையை மார்ச் 25-ம் தேதி மாலதி மதுரை ஆனையூருக்கு ஆட்டோவில் வந்து பாண்டியம்மாளிடம் விற்பனை செய்யக் கொடுத்துள்ளார். தாய்ப் பால் இல்லாமல் குழந்தை அழுததால் பாண்டியம்மாள் குழந்தைக்குப் புட்டிப் பால் புகட்டியுள்ளார்.
குழந்தைக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் மருத்துவமனைக்கு சிகிச்சைககு வந்தபோது சிக்கினார். இதில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என விசாரித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.
மதுரை அரசு மருத்துவமனை டீன் ரத்தினவேலு கூறுகையில், ”குழந்தை ஐசியூ வார்டில் சிகிச்சை பெறுகிறது. தற்போது நலமுடன் உள்ளது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்தபோது குழந்தை கடத்தப்பட்டதாக பரவும் தகவலில் உண்மையில்லை” என்றார்.