சென்னையில் தமிழக முதல்வர் “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தினை தொடங்கி வைத்து பல்வேறு பகுதிகளில் காணொளி காட்சி மூலமாக பொதுமக்கள் அவர்கள் அடைய நினைக்கும் கனவினை கேட்டறிந்தார்.
இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தனியார் கல்லூரியில் நடைபெற்ற உங்க கனவை சொல்லுங்க நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் இ. பெரியசாமி 1500 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கான “உங்க கனவை சொல்லுங்க” திட்டத்தின் கைபேசி இணைப்புகளை வழங்கினார். திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ. பி. செந்தில்குமார், பயிற்சி ஆட்சியர் கீர்த்தனா, கல்லூரி முதல்வர் ரகுராம் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

பின்னர் செய்தியாளர் சந்திப்பில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் கூறியதாவது :
மாண்புமிகு முதல்வருடைய உங்கள் கனவை சொல்லுங்கள் என்ற திட்டத்தை இன்று துவக்கி வைத்திருக்கிறார்கள், இது மிகச்சிறந்த திட்டம், ஏனென்றால் அரசாங்கம் அனைத்து விஷயங்களையும் மக்கள் சொல்லாமலே, அரசாங்கத்திடம் கேட்காமலே அவர்களின் இல்லங்களுக்குச் சென்று அவர்களுடைய கஷ்டங்களை அவர்களின் பிரச்சினைகளை கேட்டு இறுதியான தீர்வாக இருக்க வேண்டும் என்று, ஒவ்வொருவரின் கனவாக ஒவ்வொன்றும் இருக்கும் அதனை அவர்கள் எழுதிக் கொடுக்கும் பட்சத்தில் அதனை தீர்த்து வைப்பதற்காக ஏறத்தாழ 2030க்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என்பதில் தமிழக முதல்வர் உறுதியாக இருக்கிறார்கள். ஏற்கனவே கடந்த ஐந்து ஆண்டுகாலத்தில் தமிழக முதல்வர் சொன்னதையும் செய்திருக்கிறார்கள், சொல்லாததையும் செய்து இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 1500 தன்னார்வலர்கள் ஏழு லட்சம் குடும்பங்களை சந்தித்து உங்கள் கனவுகளை சொல்லுங்கள் என்பதை பதிவு செய்து அதற்குரிய நடவடிக்கையை எடுப்பதற்கு மாண்புமிகு முதல்வர் ஆர்வமாக இருக்கிறார். இது மிகச் சிறந்த திட்டம் இந்தியாவிலே, மிகப்பெரிய வெற்றியை தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு பயன்படும் என்பதில் உறுதியாக இருக்கிறோம்.
விவசாயிகளிடம் மிகக் குறைந்த விலைக்கு கரும்பு கொள்முதல் செய்வதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு :
நாம் எல்லா கரும்புகளையும் விவசாயிகளிடம் இருந்துதான் வாங்க சொல்கிறோம், விவசாயிகளிடம் அதற்குரிய அதிகாரிகள் வாங்குகின்ற பொழுது அந்த விலையை கண்டிப்பாக கொடுத்திருப்பார்கள், விவசாயிகளுக்கு முழு தொகையையும் கொடுத்து வருகிறோம். குறை சொல்வது அரசியலுக்காக குறை சொல்வார்கள், கரும்பு தமிழக விவசாயிகளிடமிருந்து மட்டுமே வாங்குகிறோம், மற்ற மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகளிடம் இருந்து வாங்கவில்லை. பொங்கல் தொகுப்பு கொடுப்பதில் எந்த ஒரு குறையும் இல்லை. ஏனென்றால், இது நல்ல திட்டம் அதில் ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்று யாராவது குறை சொல்வார்கள், வியாபாரிகள் கரும்பை விற்க வேண்டும் என்று நினைப்பார்கள், ஆனால் அதற்கு அதிகாரிகள் துணை போக மாட்டார்கள், அதனால் அவர்கள் கூறும் குறைவான விலைக்கே வாங்குகிறார்கள். இந்த அரசாங்கத்தில் விவசாயிகளுக்கு முழு தொகையும் கொடுத்துதான் கரும்பு வாங்கி இருப்போம். வியாபாரிகள் இங்கு அவர்களின் வியாபாரத்தை செய்ய முடியாது என்று கூறினார்.
அன்புமணி ராமதாஸ் – திமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடக்கிறதா என்ற கேள்விக்கு :
அன்புமணி ராமதாஸ் அதிமுகவில் கூட்டணியில் இருந்து வருகிறார். திமுகவோடு ராமதாஸ் இணையக்கூடிய வாய்ப்புகள் அல்லது பேச்சு வார்த்தைகள் குறித்து அவர் என்ன நினைக்கிறார் என்பது எனக்கு தெரியாது, எங்கள் தலைமையோடு பேசி என்ன செய்யப் போகிறார் என்பது எனக்கு தெரியாது. ஆக மொத்தம் அரசியல் கணக்குகள் யாரும் எந்த கூட்டணிக்கும் செல்லலாம் வாய்ப்பு இருக்கின்ற பட்சத்தில் அந்த கூட்டணியில் இடம் பெற வாய்ப்பு இருக்கும். ஆனால், எனக்கு அதைப் பற்றி தெரியாது என்று கூறினார்.




