• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் துப்பாக்கிச்சூடு – 9 பேர் உயிரிழப்பு

ByA.Tamilselvan

Jan 22, 2023

லாஸ் ஏஞ்சல்ஸ்: அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் சீன புத்தாண்டு கொண்டாட்டத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மான்டெரி பார்க் நகரில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. ஆசிய கண்டத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ள இங்கு, ஆயிரக்கணக்கானோர் ஒன்றாகக்கூடி சீன புத்தாண்டை கொண்டாடிக்கொண்டிருந்தபோது அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு 10.22 மணி அளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது.
நடன அரங்கில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் ஒரு ஆண் என்றும், கையில் வைத்திருந்த இயந்திர துப்பாக்கியைக் கொண்டு அவர் கண்மூடித்தனமாக சுட்டதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டை அடுத்து அங்கிருந்தவர்கள் அனைவரும் அலறி அடித்துக்கொண்டு பாதுகாப்பான இடம் நோக்கி ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கொண்டாட்டத்தில் இருந்தபோது எதிர்பாராத விதமாக இந்த துப்பாக்கிச்சூடு நடந்ததாகவும், அந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் வெளிவர முடியவில்லை என்றும் 47 வயதாகும் எட்வின் சென் என்ற நபர் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை அடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். நடன அரங்குக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகர கட்டுப்பாட்டாளர் கென்னித் மெஜியா ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.