• Fri. Nov 21st, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

மூன்று வேளாண் சட்டங்களும் ரத்து-மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Byகாயத்ரி

Nov 24, 2021

சர்ச்சைக்குரிய மூன்று வேளாண் சட்டங்களையும் வாபஸ் பெறுவதற்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்த மூன்று சட்டங்களும் பெரும் முதலாளிகளுக்கு ஆதரவாக இருப்பதாகக் கூறி உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் டில்லியில் தீவிர போராட்டங்களை தொடர்ந்து நடத்தி வந்தனர்.
உத்தரப் பிரதேசம் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த போராட்டம் பாஜகவுக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்று கணிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற உள்ளதாக அறிவித்தார். பிரதமர் அறிவித்த போதிலும் கூட இந்த முடிவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்க வேண்டியது அவசியம்.
இந்நிலையில், டில்லியில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மூன்று சட்டங்களை வாபஸ் பெறுவதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு இருக்கிறது.

எனவே, இந்த மூன்று சட்டங்களையும் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் சமர்ப்பித்து வாபஸ் பெறுவதற்கான நடவடிக்கை மட்டுமே இனிமேல் எஞ்சியிருக்கிறது. பிரதமர் உறுதிமொழி அளித்து இருந்தாலும் கூட, மூன்று சட்டங்களை வாபஸ் பெற்ற பிறகுதான் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் அறிவித்துள்ளனர்.