மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வெள்ளைமலைப்பட்டி – கன்னிமார்புரம் கிராமத்தில் 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்த கிராம மக்கள் மயாணத்திற்கு செல்ல முறையான பாதை வசதி இல்லை என கூறப்படுகிறது., பல ஆண்டுகளாக தனிநபர்களின் பட்டா நிலங்களின் வழியாகவே இறந்தவர்களின் உடல்களை எடுத்துச் செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

மயாணத்திற்கு செல்ல முறையான பாதை வசதி அமைத்து தர வருவாய்த்துறை அலுவலர்களிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்தும் எந்த நடவடிக்கைகளும் இல்லை என கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த அதே ஊரைச் சேர்ந்த தங்கராஜ் என்பவரது உடலை ஆம்புலென்ஸ் வாகனத்திலேயே வைத்து இடையபட்டி விலக்கு பகுதியில் பொதுமக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்து விரைந்து வந்த உசிலம்பட்டி டிஎஸ்பி சந்திரசேகரன், வட்டாச்சியர் பாலகிருஷ்ணன், உசிலம்பட்டி திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் அஜித்பாண்டி உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய பாதை வசதி அமைத்து தரப்படும் என உறுதியளித்ததை அடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இந்த சாலை மறியலால் உசிலம்பட்டி வத்தலக்குண்டு நெடுஞ்சாலையில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.