• Mon. May 20th, 2024

பெரம்பலூர் நல்லூர் கிராமத்தில் கலெக்டர் க.கற்பகம் நலத்திட்ட உதவி

Byதி.ஜீவா

Feb 14, 2024
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டம், பெருமத்தூர் (வடக்கு), நல்லூர் கிராமத்தில், இன்று (14.02.2024) நடைபெற்ற மாவட்ட ஆட்சித்தலைவரின் மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் க.கற்பகம் வழங்கினார்.  

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது..,
மக்கள் அரசு அலுவலர்களை தேடிச்சென்று தங்கள் கோரிக்கை மனுக்களை வழங்கும் நிலை மாறி மக்களைத்தேடி அனைத்துத்துறைகளின் அரசு அலுவலர்களும் நேரில் வந்து, மக்களிடம் அரசின் திட்டங்கள் குறித்து விரிவாக எடுத்துரைத்து கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொள்ளும் வகையில் நடத்தப்படுவதே மக்கள் தொடர்பு திட்ட முகாம். இன்று நடைபெற்ற இந்த முகாமிற்காக பொதுமக்களிடமிருந்து 445 மனுக்கள் பெறப்பட்டு அதில் 294 மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு 151 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இன்றைய தினம் 349 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இது போன்ற அரசு விழாக்கள் என்பது, மக்களுக்காக அரசு செயல்படுத்துகின்ற அனைத்து திட்டங்களையும் கொண்டு சேர்க்கும் முயற்சியாகும்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட நிர்வாகத்தில் பணிபுரியும் அனைத்து அரசு முதல் நிலை அலுவலர்களும் பொதுமக்களின் வசிக்கும் இடங்களுக்கு நேரில் சென்று அவர்களது குறைகளை கேட்டறிந்து அதனை நிவர்த்தி செய்ய உங்களைத்தேடி உங்கள் ஊரில் என்ற திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். அதனடிப்படையில் கடந்த மாதம் வேப்பந்தட்டை வட்டத்தில் 24 மணிநேரம் தங்கி மக்களின் கோரிக்கைகள் கேட்டறியப்பட்டது. அதனைத்தொடர்ந்து, எதிர்வரும், 21.2.2024 அன்று, உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற திட்டமானது வேப்பூர் ஊராட்சியில் நடைபெற உள்ளது. வேப்பூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் அவர்களது குறைகளை கேட்டு அறிவதற்கு அலுவலர்கள் நேரடியாக செல்ல உள்ளார்கள். இந்தத் திட்டத்தினை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
சமுதாய பொருளாதார சூழ்நிலை எக்காரணத்தைக் கொண்டும் ஒரு மாணவரின் உயர்கல்விக்கு தடையாக இருக்கக் கூடாது என்ற நோக்கத்தின் அடிப்படையில் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, பெண் குழந்தைகளுக்கு புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசு உதவிகள் வழங்குவதுடன் கல்வி கடன் உதவிகளும் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் நாளை 15.02.2024 (வியாழக்கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் பெரம்பலூர் ரோவர் பள்ளி வளாகத்தில் கல்விகடன் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் அனைத்து மாணவ மாணவிகளும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலம், படித்த வேலை நாடுனர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி வகுப்பினை மாணவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பெரம்பலூர் நகராட்சி அலுவலக வளாகத்தில் போட்டி தேர்வுக்கு தேவைப்படும் அனைத்து புத்தகங்களும் அடங்கிய அறிவுசார் மையம் இலவச இணைய வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. எனவே போட்டி தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்கள் இந்த நூலகத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் தனியார் துறையில் வேலைக்குச் செல்ல விரும்புபவர்கள் பயன்பெறும் வகையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொழில் தொடங்க விருப்பப்படுபவர்களுக்கும் அரசின் சார்பில் பல்வேறு மானியத்துடன் கூடிய கடன் வழங்கும் திட்டங்கள் நடைமுறையில் உள்ளது.
மக்கள் அனைவரும் ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொள்ள வேண்டும். கடந்த காலங்களில் சர்க்கரை நோய், இரத்த சர்க்கரை போன்ற எந்த நோய்களும் இல்லாமல் இருந்தது. உணவு பழக்க வழக்கங்கள் மாறியவுடன் தற்போது அனைத்து நோய்களும் வருகிறது. எனவே பொதுமக்கள் அனைவரும் பாரம்பரிய ஊட்டச்சத்து மிக்க உணவினை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியினை பெற்று நோயற்ற வாழ்வினை வாழ வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் தங்களது வீடுகளில் சேகரமாகும் குப்பைகளை தூய்மை பணியாளர்களிடம் கொடுக்கும்போது மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்துக் கொடுத்து வீடுகளை சுற்றி சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும். கிராமப்புறங்களில் பொதுமக்களின் ஒத்துழைப்பு இருந்தால்தான் சுற்றுச்சூழலை சுகாதாரமாக வைத்துக் கொள்ள முடியும்.
மெல்லிய பிளாஸ்டிக் பைகளில் சூடான உணவுப் பொருட்களை வைக்கும்போது பிளாஸ்டிக் உருகி உணவுப் பொருட்களுடன் கலந்து நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும். கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும்போது வீட்டிலிருந்தே துணிப்பைகள் எடுத்துச் செல்ல வேண்டும். பொதுமக்கள் அனைவரும் சுற்றுப்புறத்தை சுகாதாரமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மக்களின் வீட்டிற்கு சென்று, இரத்த சர்க்கரை மற்றும் சர்க்கரை நோய் பரிசோதித்து உங்களுக்கு இதில் ஏதாவது நோய் இருப்பதாக கூறினால் மருத்துவமனைக்குச் சென்று சோதனை செய்து அதற்குண்டான மருந்து மாத்திரைகளை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் பொதுமக்களுக்கு உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய நோய் அபாயத்தினை தவிர்க்க முடியும். எனவே பொதுமக்கள் மக்களைத் தேடி மருத்துவம் என்ற அற்புதத் திட்டத்தினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், புற்றுநோய், சிறுநீரக நோய், டயாலஸிஸ் செய்பவர்கள், எச்.ஜ.வி, காசநோய் போன்ற நோயால் பாதிக்கப்பட்டு, எந்த ஒரு வேலையும் செய்ய இயலாத நிலையில் வாழ்வாதாரத்திற்கே பொருளீட்ட இயலாத நிலையில் உள்ளவர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதுபோன்ற பல்வேறு துறைகளின் சார்பில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அனைவரும் இந்த திட்டங்களை சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வருவாய்துறையின் சார்பில் 100 பயனாளிகளுக்கு ரூ.12,00,000 மதிப்பீட்டிலும், வருவாய் துறை (சமூக பாதுகாப்புத் திட்டம்) சார்பில் 84 பயனாளிகளுக்கு ரூ.11,54,000 மதிப்பீட்டிலும், ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில் 20 பயனாளிகளுக்கு ரூ.34,00,000 மதிப்பீட்டிலும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 75 பயனாளிகளுக்கு ரூ.75,00,000 மதிப்பீட்டிலும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.27,395 மதிப்பீட்டிலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.67,745 மதிப்பீட்டிலும், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 19 பயனாளிகளுக்கு ரூ.5,85,000 மதிப்பீட்டிலும், வேளாண்மைத்துறையின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.14,975 மதிப்பீட்டிலும், தோட்டக்கலைத் துறையின் சார்பில் 01 பயனாளிக்கு ரூ.1,35,855 மதிப்பீட்டிலும், கூட்டுறவுத் துறையின் சார்பில் 30 பயனாளிகளுக்கு ரூ.18,76,500 மதிப்பீட்டிலும், மகளிர் திட்டத்தின் சார்பில் 05 பயனாளிகளுக்கு ரூ.1,00,000 மதிப்பீட்டிலும் என மொத்தம் 349 பயனாளிகளுக்கு ரூ.1,60,61,470 மதிப்பீட்டிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.கற்பகம் வழங்கினார்.
இந்நிகழ்வில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, சார் ஆட்சியர் சு.கோகுல் இ.ஆ.ப., மகளிர் திட்ட இயக்குநர் அருணாச்சலம், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) வீரமலை, கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் சுரேஷ் கிறிஸ்டோபர், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் மு.கார்த்திக்கேயன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பொம்மி, தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் சரண்யா, குன்னம் வட்டாட்சியர் கோவிந்தம்மாள், பெருமத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பல்வேறு அரசு துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *