• Mon. Nov 17th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

பேருந்து நிலையத்திற்குள் பாரபட்சம் காட்டுவதால் பயணிகள் அவதி..,

ByKalamegam Viswanathan

Nov 17, 2025

மதுரை மாவட்டம் சோழவந்தானில் பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்த நிலையில் பல பேருந்துகள் பேருந்து நிலையம் வராததால் பயணிகள் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.

பேருந்து நிலையத்திற்குள் பேருந்துகள் வராத காரணம் குறித்து அதிகாரிகள் மற்றும் பணியாளர்களிடம் கேட்ட நிலையில் பேருந்து நிலையம் வருவதற்கு போடப்பட்ட சர்வீஸ் சாலையில் ஆக்கிரமிப்புகள் ணஉள்ளதாலும் மற்றும் மின்கம்பங்கள் சர்வீஸ் சாலையின் நடுவில் இருப்பதால் பேருந்துகள் வர முடியாத சூழ்நிலை இருப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பேருந்துகள் வருவதற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் பயணிகள் சமூக ஆர்வலர்கள் என அனைவரும் கடந்த மூன்று ஆண்டுகளாக அரசுக்கு தொடர்ச்சியாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரிகள் இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது இந்த நிலையில் கருப்பட்டி இரும்பாடி நாச்சிகுளம் மேல் நாச்சிகுளம் பொம்மன்பட்டி கணேசபுரம் அம்மச்சியாபுரம் ஆகிய கிராமங்களுக்கு செல்லக்கூடிய மினி பேருந்து உரிமையாளரிடம் இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது உடனடியாக சோழவந்தானை சேர்ந்த தனியார் மினி பேருந்தின் உரிமையாளர் மருது பாண்டியன் தனது இரண்டு பேருந்துகளையும் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்ல பணியாளர்களுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் கடந்த ஒரு வார காலமாக தனியார் மினி பேருந்துகள் சோழவந்தான் பேருந்து நிலையத்திற்குள் வந்து செல்கிறது.

இதனால் கருப்பட்டி நாச்சிகுளம் இரும்பாடி பகுதி பொதுமக்கள் மினி பேருந்து உரிமையாளருக்கு தங்களது நன்றியை தெரிவித்ததுடன் மினி பேருந்து வந்து செல்லும் நிலையில் அரசு பேருந்து மட்டும் ஏன் வருவதில்லை என புகார் தெரிவிக்கின்றனர். மேலும் பேருந்துகள் வருவதற்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் எனவும் மின்சார துறையினருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

குறிப்பாக கருப்பட்டி நாச்சிகுளம் இரும்பாடி கரட்டுப்பட்டி பகுதிகளிலிருந்து பெரியார் பேருந்து நிலையம் அண்ணா பேருந்து நிலையம் போன்ற இடங்களுக்கு செல்லும் பேருந்துகள் பேருந்து நிலையம் உள்ளே செல்லாமல் வட்ட பிள்ளையார் கோவில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை இறக்கிவிட்டு சென்று விடுவதால் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் ஒரு கிலோ மீட்டர் தூரமுள்ள மருத்துவமனைக்கு நடந்து செல்ல வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் தனியார் பேருந்துகள் பேருந்து நிலையம் வருவதால் இந்த சிரமம் குறைக்கப்படுவதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.