தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் சார்பில் உலகத் தொழில் மாநாடு கோவை கொடிசியாவில் நடைபெற உள்ளது இதை ஒட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து அவிநாசி சாலையில் உள்ள தனியார் ஹோட்டலில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் அமைச்சர் அன்பரசன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்பொழுது பேசும்போது :-
கோவையில் வருகிற அக்டோபர் 9, 10 தேதிகளில் உலக புத்தொழில் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார் என தொழில் துறை அமைச்சர் டி.ஆர்.அன்பரசன் தெரிவித்தார்.

இந்த மாநாட்டிற்கான லோகோ மற்றும் இணையதளத்தை கடந்த ஏப்ரல் மாதம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 19 நாடுகளில் இருந்து 264 பங்கேற்பாளர்கள், 30,000-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர், இந்தியாவின் 10 மாநில அரசுத் துறைகள், ஒன்றிய அரசின் பத்து துறைகள் மற்றும் முன்னணி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
தமிழ்நாட்டில் 750-க்கும் மேற்பட்ட கண்காட்சி அரங்குகள், 315 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆட்சி காலத்தில் ஸ்டார்ட் அப் வளர்ச்சிக்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆனால் தற்போதைய தி.மு.க ஆட்சியில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்குவிக்க டான்சீட் நிதி உதவி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளதாக அவர் கூறினார்.

இதுவரை 212 ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் ரூ.79.40 கோடி அரசு முதலீடு செய்யப்பட்டு உள்ளது. அதில் 68 நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.554.49 கோடி முதலீடு பெற்று உள்ளன. இதன் மூலம் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்பு பெற்று உள்ளனர். மேலும், 43 எஸ்சி, எஸ்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சிறப்பு நிதி உதவி வழங்கப்பட்டு உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
2021 ஆம் ஆண்டு 232 ஸ்டார்ட் அப் நிறுவனங்களே பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது அது 12,000-ஐ கடந்து உள்ளதாகவும், தமிழ்நாடு தற்போது இந்தியாவில் ஸ்டார்ட் அப் வளர்ச்சியில் முதல் இடத்தில் உள்ளதாகவும் அமைச்சர் அன்பரசன் தெரிவித்தார்.
எம்.எஸ்.எம். இக்கு வருடத்திற்கு ரூ.250 கோடி மின்சார கட்டணம் அரசு தருகிறது
சிறு மற்றும் குறு தொழில்கள் எதிர்கொள்ளும் மின்சார கட்டண சுமையை குறைப்பதற்காக, வருடத்திற்கு ரூ.250 கோடி மாநில அரசு ஏற்று வருகிறது என அமைச்சர் கூறினார்.
எந்திரங்களுக்கு வழங்கப்படும் மானியத்தில் தாமதம் ஏற்படுகிறது என்ற குற்றச்சாட்டுக்கு, அவை அனைத்தும் அண்ணல் அம்பேத்கர் திட்டத்தின் கீழ் சீனியாரிட்டி முறையில், முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த பத்து ஆண்டுகளில் 52,000 தொழில் முனைவோர்கள் மட்டுமே உருவாக்கப்பட்ட நிலையில், நான்கு ஆண்டுகளில் 60,000-க்கும் மேற்பட்டோர் உருவாக்கப்பட்டு உள்ளனர் என்றார்.

பல்வேறு ஜி.எஸ்.டி வரி குறைப்பு பிரச்சனைகள் குறித்து செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு,
ஜி.எஸ்.டி குறைப்பின் தாக்கத்தை ஆய்வு செய்ய குறைந்தது ஒரு வாரம் ஆகும் எனவும், எம்.எஸ்.எம்.இ பிரச்சனைகள் நிதி அமைச்சரின் மூலம் மத்திய அரசிடம் எடுத்துச் செல்லப்படுவதாகவும் கூறினார்.
சிறு தொழிலாளர்களுக்கு உரிமம், மின் இணைப்பு போன்றவற்றில் பிரச்சனை இருந்தால், அதனைத் தெரிவிக்க வேண்டும். 2.0 மனுக்கள் வழியாக வந்த பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு உள்ளன. எங்கெல்லாம் குற்றச்சாட்டு வந்து இருக்கிறதோ ? அங்கெல்லாம் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.