காரைக்கால் அடுத்த காரைக்கால்மேடு மீனவ கிராமத்தில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் உலக நன்மை வேண்டி ரேணுகா தேவி அம்மனுக்கு பால்குடம் எடுக்கும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்தாண்டு பால்குட திருவிழாவில் 1000க்கும் மேற்பட்ட மீனவ பெண்கள் மற்றும் குழந்தைகள் பால்குடம் எடுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இதில் புதுச்சேரி மாநில குடிமைப் பொருள் அமைச்சர் திருமுருகன் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தார்.

முன்னதாக விநாயகர் ஆலயத்தில் இருந்து புறப்பட்ட பால்குடம் ஊர்வலம் மீனவ கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக காரைக்கால்மேடு கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ரேணுகாதேவி அம்மன் ஆலயம் வந்தடைந்து அம்மனுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து மீனவர்களை காக்கும் கடல் அன்னைக்கு கடலில் பால் ஊற்றி கடல் அன்னையை வழிபட்டனர். இந்த நிகழ்ச்சியில் காரைக்கால்மேடு, கிளிஞ்சல்மேடு, கோட்டுச்சேரிமேடு, உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் பங்கேற்று ரேணுகாதேவி அம்மனின் அருள் பெற்றனர்.




