நாகை பப்ளிக் ஆபீஸ் சாலையில் அனுச்சியக்குடி மகாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி பொங்கல் திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 6- ந் தேதி காப்பு கட்டுதலுடன் வெகு விமர்சையாக தொடங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் பால்குட ஊர்வலம் நடந்தது. விழாவின் முக்கியநிகழ்ச்சியான முளைப்பாரி ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் 1000 பெண்கள் கலந்துகொண்டு முளைப்பாரியை தலையில் சுமந்தபடி முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக வந்தனர்.

முடிவில் முளைப்பாரி ஊர்வலம் கோவிலை வந்தடைந்தது. தொடந்து அம்மனுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து பெண்கள் கும்மி நடனம் ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
