• Sat. Sep 20th, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

நான் எல்லா ஆண்களையும் அப்படி சொல்லவில்லை – சட்டப்பேரவையில் சலசலப்பு

தமிழகசட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது.

ஆண்கள் கையில் வரும் வருமானம் கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும்” என்று கூறியதால், சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் இன்று கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர் துறை, மற்றும் பத்திரப்பதிவு மற்றும் வணிக வரித்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற்றது. இதற்கு இத்துறைகளின் அமைச்சர்கள் ஆர்.காந்தி, பி.மூர்த்தி ஆகியோர் பதிலளித்து, பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டனர். முன்னதாக காலை 10 மணிக்கு கேள்வி நேரம் தொடங்கியது. உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதிலளித்தனர்.

அப்போது பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன், “மகளிர் சுய உதவிக்குழுக்கள் வறுமையைப் போக்குவதில் மிக முக்கியமான பங்கு வகித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் பெண்களுடைய வருமானம் என்பது முழுக்க முழுக்க குடும்பத்திற்காக செலவு செய்யப்படுகிறது. குடும்பத்தினருடைய பாதுகாப்பு, உடல்நலம் அல்லது பராமரிப்பு, குழந்தைகளின் கல்வி என்று முழுக்க முழுக்க பெண்கள் கையில் கொடுக்கப்படுகிற பணம் என்பது, முழுமையாக குடும்பத்திற்காக பயன்படுகிறது. ஆனால், ஆண்கள் கையில் வரும் வருமானம்கூட பீடி, சிகரெட், டாஸ்மாக் என்று போய்விடும். ஆனால் பெண்கள் கையில் கொடுக்கின்ற பணம் முழுக்க முழுக்க குடும்பத்திற்கு போகிறது” என்றார்.

இதனால் சட்டப்பேரவையில் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், “நான் எல்லா ஆண்களையும் சொல்லவில்லை ” என்றார். ஆனாலும் பேரவையில் மீண்டும் சலசலப்பு ஏற்பட்டது. அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் அனைவரையும் அமைதியாக இருககும்படி கூறினார். மேலும், “மகளிர் சுயஉதவிக் குழுக்கள் உற்பத்தி செய்யப்படுகிற பொருள்களை ஆன்லைனில் விற்பனை செய்யமுடியுமா என்று கேட்கிறீர்கள், அதை மட்டும் கேளுங்கள்” என்று கூறினார்.

அப்போது வானதி சீனிவாசம், “நான் எல்லோரையும் அப்படி சொல்லவில்லை. மற்றவர்கள் எல்லாம் கொதிக்க வேண்டாம். எதற்கு கொதிக்க வேண்டும். ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்குவது இன்று நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தமிழகத்தில் சிறப்பாக செயல்படக்கூடிய நிலை இருக்கிறது. இதில் ஜெம் போர்டல் குறித்து அமைச்சர் குறிப்பிட்டார். 2016-ம் ஆண்டு மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் கீழ், அமைச்சகங்கள், துறைகள், அரசு சார்பு நிறுவனங்கள், என மின்னணு வாயிலாகத்தான் பொருட்களை வாங்க வேண்டும் என பிரதமர் மோடியின் ஏற்பாட்டின் காரணமாக, கடந்த வருடம் மட்டும் 1 லட்சம் கோடி ஆர்டர் வேல்யூ மட்டும் ஜெம் போர்டலில் கிடைத்துள்ளது.

ஆனால், இதுதொடர்பாக அமைச்சர் அளித்துள்ள பதில் பொதுவானதாக உள்ளது. முன்னணி நிறுவனங்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டிருந்தால், ஏற்கெனவே மத்திய அமைச்சகம், பிளிஃப்கார்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது என்றார். ஆனால் அமைச்சர் அளித்த பதிலில் தனியாக இதற்கென்று திட்டம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். எந்த நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. ஆயிரக்கணக்கான பொருட்கள் உற்பத்தி செய்கின்ற நிலையில் 69 பொருட்கள் மட்டும் விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருக்கிறார். எனவே இதற்கான பதிலை எதிர்பார்க்கிறேன் ” என்றார்.