தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகே அல்சக்குடி கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (60). இவரது மகன் விவேக் (24). விவசாய கூலித் தொழிலாளியாக உள்ளார். இன்னும் திருமணம் ஆகவில்லை.

இவர் வீட்டுக்கு எதிரே உள்ளவர் அருண் (28) இவரது மனைவி கெளசல்யா (24). எதிரெதிர் வீடு என்பதால் விவேக்கிற்கும் – கெளசல்யாவுக்கும், கடந்த சில மாதங்களாக தகாத உறவு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.


இதையடுத்து, அருண் வெளிநாட்டில் இருந்து, கடந்த மூன்று மாதங்களுக்கு முன், ஊருக்கு திரும்பிய நிலையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனைவி மற்றும் விவேக் ஆகிய இருவரையும் அருண் கண்டித்துள்ளார். மேலும் இது தொடர்பாக விவேக்கிற்கும் – அருணுக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு அருண் தனது உறவினர்களான, அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (30), முத்தமிழ்செல்வன் (32), பாலசுப்பிரமணியன் (30) ஆகியோருடன் குடி போதையில், விவேக் வீட்டுக்கு சென்று தகராறு செய்துள்ளனர்.
அப்போது வீட்டில் இருந்து மூர்த்தி அவரது மகன் விவேக் ஆகியோர் வெளியே வந்தபோது நான்கு பேரும் சேர்ந்து அரிவாளால் விவேக்கை வெட்ட முயன்றுள்ளனர். அப்போது அதை தடுக்க குறுக்கே வந்த விவேக்கின் தந்தை மூர்த்தியின் கழுத்து மற்றும் தலை பகுதியில், வெட்டி விழுந்துள்ளது. இதில் பலத்த படுகாயமடைந்து மூர்த்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததார்.
இது குறித்து தகவலறிந்த நடுக்காவேரி காவல்துறையினர் உயிரிழந்த மூர்த்தியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து தமிழரசன், முத்தமிழ்செல்வன், பாலசுப்பிரமணியன் ஆகிய மூன்று பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவான அருணை தேடி வருகின்றனர்.




