• Thu. Jan 15th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

இன்ஷியலை தமிழில் எழுத அதிரடி உத்தரவிட்ட தமிழக அரசு..!

Byவிஷா

Dec 9, 2021

பள்ளி, கல்லூரி ஆவணங்களில் தமிழில் பெயர் எழுதும் போது முன்னெழுத்தையும் தமிழில் எழுத வேண்டும் என தமிழக அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.


இது தொடர்பான அரசாணையில், 2021-2022 ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை 46ன் போது தொழில் துறை அமைச்சர் கீழ்க்கண்ட அறிவிப்பு அறிவிக்கப்பட்டது. தமிழில் பெயர் எழுதும் போது முன் எழுத்தையும் தமிழிலேயே எழுதும் நடைமுறையைப் பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.

பொதுமக்களும் பொதுப் பயன்பாடுகளில் இம்முறையைப் பின்பற்ற ஊக்குவிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, அரசின் கவமான பரிசீலனைக்கு பின் தமிழ் வளர்ச்சித்துறை மானியக் கோரிக்கை அறிவிப்பில் இடம்பெற்ற அறிவிப்பினை செயல்படுத்த ஏதுவாக, தமிழ் வளர்ச்சி இயக்குநரின் கருத்துருவினை ஏற்று தமிழ் ஆட்சிமொழி சட்டத்தினை முழுமையாக செயற்படுத்தும் பொருட்டு பின்வருமாறு ஆணையிடலாம் எனக் கருதி அவ்வாறே அரசு ஆணையிடுகிறது.


முதலமைச்சர் முதல் கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துகளையும் தமிழிலேயே எழுதப்பட வேண்டுமாறு ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை மீண்டும் வலியுறுத்தப்படுகிறது.

தொட்டில் பழக்கம் எனத் தொடங்கும் பழமொழிக்கேற்ப மாணவர்களின் தொடக்க கல்வி முதல் கல்லூரி காலம் வரையில் தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு தமிழை முதன் முதலில் மாணவர்களது பெயரில் சேர்ப்பது சிறப்பானதாக அமையும்.

பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே தமிழில் பெயர் எழுதும் போது அதன் முன்னெழுத்தையும் தமிழில் எழுதும் நடைமுறையினை அன்றாட வாழ்வில் கொண்டு வர மாணவர்கள் பள்ளிகளில் சேர அளிக்கும் விண்ணப்பம் வருகை பதிவேடும் பள்ளி, கல்லூரி முடித்து பெறும் சான்றிதழ் வரையில் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே வழங்கும் நடைமுறையினை கொண்டு வரவும் மேலும் மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும் தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட அறிவுறுத்தப்படுகிறது.


தலைமைச் செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை அனைத்து அரசுத் துறைகளிலும் வெளியிடப்படும் ஆணைகள் மற்றும் ஆவணங்கள் பொது மக்களின் பெயர்கள் குறிப்பிடும் போது முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும் தமிழிலே பதிவு செய்யப்பட அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் அரசு துறைகளில் பெறப்படும் விண்ணப்பங்களிலும் தமிழ் முன்னெழுத்துடன் கையொப்பத்தினையும் தமிழிலேயே இடுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்ளப்படுகிறது. பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் பொது மக்கள் பார்வையில்படும் வகையில் தமிழின் பெருமையை சுட்டிக்காட்டியும் முன்னெழுத்தும் தமிழில் கையொப்பமும் தமிழில் கையொப்பமிடுவதை பெருமிதப்படுத்தும் வகையில் தெரிவிக்கப்பட்டவாறு சுவரொட்டிகள் அமைத்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டும்.

இந்த அரசாணை வெளியிடப்படும் நாளிலிருந்து நடைமுறைப் படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.