• Fri. May 3rd, 2024

ஓடும் பேருந்தில் பெண் பயணி விழுந்து விபத்து : எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்

Byவிஷா

Feb 7, 2024

சென்னை மாநகரப் பேருந்தின் பலகை உடைந்து பெண் பயணி ஒருவர் காயமடைந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி திமுக அரசுக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.
சென்னை அமைந்தகரையில், மாநகர பேருந்தின் பலகை உடைந்து நேற்று பெண் ஒருவர் கீழே விழுந்த சம்பம் பரபரப்பை ஏற்படுத்தியது. வள்ளலார் நகரில் இருந்து திருவேற்காடு வரை செல்லும் மாநகரப் பேருந்து (தடம் எண் 59) நேற்று மதியம் பயணிகளை ஏற்றி கொண்டு சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் பூந்தமல்லி நெடுஞ்சாலை, அமைந்தகரை, என்.எஸ்.கே.நகர் அருகே சென்று கொண்டிருந்தபோது பேருந்தின் கடைசி சீட்டில் அமர்ந்திருந்த பெண் ஒருவர் பஸ் நிறுத்தத்தில் இறங்குவதற்காக எழுந்து நின்று கொண்டிருந்தார்.
அப்போது திடீரென பஸ்சில் இருந்த பலகை உடைந்து விழுந்ததில் அந்த பெண் ஓட்டை வழியாக அப்படியே காலை மடித்து கொண்டு கீழே விழுந்தார். இதை கண்டதும் கடும் அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் சத்தம் போட்டதையடுத்து டிரைவர் பஸ்சை நிறுத்தினார். சிறிது தூரம் தரையில் கால் தேய்த்தபடி அந்த பெண் தர, தரவென இழுத்து சென்ற நிலையில், பயணிகளும், பொதுமக்களும் பலகை உடைந்து விழுந்த பெண்ணை பத்திரமாக மீட்டனர். பின்னர் அவருக்கு முதலுதவி அளித்து அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
பேருந்தில் இருந்து பெண் கீழே விழுந்தது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, சென்னை அமைந்தகரையில் ஓடும் மாநகரப் பேருந்தில் இருக்கையின் கீழ் இருந்த பலகை உடைந்து பெண் ஒருவர் சாலையில் விழுந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஆட்சிக்கு வந்தது முதலே எந்த ஒரு புதிய பேருந்துகளையும் வாங்காமல், தரமற்ற, பயன்பாட்டிற்கு தகுதியற்ற பேருந்துகளுக்கெல்லாம் பிங்க் நிற பெயிண்ட் பூசி “மகளிர் இலவசப் பேருந்து” என்ற பெயரில் இயக்கி பயணிக்கும் பொதுமக்களின் உயிருக்கே ஆபத்தான நிலையினை உருவாக்கியிருக்கும் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இனி பஸ் இலவசம் என்பதை தாண்டி, மக்களுக்கு மாவுகட்டும் இலவசம் என்று அறிவித்தாலும் ஆச்சரியமில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் ஆட்சியில் மக்கள் உயிர்பிழைத்து வாழ்வதே மாபெரும் சாதனை என்ற நிலையிலே தான் இன்றைய திமுக அரசின் செயல்பாடுகள் அனைத்தும் இருக்கின்றன என்பதற்கு இம்மாதிரியான நிகழ்வுகள்தான் சாட்சி.
தமிழ்நாடு முழுக்க இயக்கப்படும் அரசுப் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமானப் பேருந்துகளில் பெரும்பாலானவை தரமற்ற முறையிலே இருப்பதனை இதுபோன்ற தொடர் விபத்துகள் உணர்த்துகின்றன. மக்களைப் பாதுகாப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசேர்க்கும் வண்ணம், புதிய பேருந்துகள் வாங்கி, ஏற்கனவே உள்ள பேருந்துகளுக்கு உரிய தரப் பரிசோதனைகள் மேற்கொண்டு, பொதுமக்களுக்கு பாதுகாப்பான பயணம் வழங்குவதை உறுதிசெய்யுமாறு இந்த திமுக அரசை வலியுறுத்துவதாக தனது எக்ஸ் பதிவில் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *