• Thu. May 16th, 2024

திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் திமுகவினர்

Byவிஷா

Apr 5, 2024

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிடும் ஜெகத்ரட்சகன் பிரச்சாரத்திற்கு திமுகவினரே கருப்புக்கொடி கட்டி எதிர்ப்புத் தெரிவித்து வருவது கட்சித் தலைமையை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் களம் சூடு பறந்து வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிராமக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக ஜெகத்ரட்சகன் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக திமுகவினரே போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெமிலி கிழக்கு ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு கிராமங்களில் ஜெகத்ரட்சகன் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.
அப்போது பள்ளூர், இலுப்பைதண்டலம், கீழ் வெங்கடாபுரம் உள்ளிட்ட கிராமங்களுக்குள் நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளரும் நெமிலி ஒன்றிய குழு தலைவருமான வடிவேலுவுடன் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஊருக்குள் வரக்கூடாது. வந்தால் நாங்கள் தேர்தலை புறக்கணிப்பு செய்வோம் என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தனர். அதனால் சில கிராமங்களுக்கு செல்வதை வேட்பாளர் ஜெகத்ரட்சகன் தவிர்த்தார்.
ஆனாலும் பள்ளூர் கிராமத்துக்கு வாக்கு சேகரிக்க நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலுவுடன் வேட்பாளர் ஜெகத்ரட்சகன் சென்றார். அப்போது ஊருக்கு வெளியே தயாராக நின்றிருந்த திமுகவினர் கையில் கருப்பு கொடி மற்றும் கருப்பு பலூன்களை வைத்துக்கொண்டு நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேல் உடன் வேட்பாளர் வந்தால் அவரை ஊருக்குள் விடமாட்டோம் என்று கோஷங்கள் எழுப்பினர் இதன் காரணமாக அந்த இடம் பரபரப்பான சூழல் நிலவியது.
இருந்த போதும் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் ஒன்றிய செயலாளருடன் ஊருக்குள் பிரச்சார வாகனங்களுடன் செல்ல முயன்றார். அப்போது திமுகவினர் கண்டன கோஷங்களை எழுப்பினர். அங்கிருந்த போலீசார் கோஷங்கள் எழுப்பியவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். மேலும் அவர்கள் வைத்திருந்த கருப்புக்கொடி, கருப்பு பலூன்களை பிடுங்கி கீழே எறிந்தனர்.
இந்த பதற்றமான சூழ்நிலைக்கு மத்தியில், வேட்பாளர் ஜெகத்ரட்சகன், நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு மற்றும் நிர்வாகிகள் பள்ளூரில் வாக்கு சேகரித்துவிட்டு அங்கிருந்து திரும்பினார். அப்போதும் திமுக நிர்வாகிகள், இங்கு திமுக படுதோல்வி அடையும் என்று கோஷம் எழுப்பினர். திமுக வேட்பாளருக்கு எதிர்ப்பு தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகி கூறும்போது, நெமிலி கிழக்கு ஒன்றிய செயலாளர் வடிவேலு உடன் வேட்பாளர் எங்கள் கிராமத்துக்கு வரக்கூடாது. நாங்கள் தேர்தல் வேலை செய்ய மாட்டோம். தேர்தலை புறக்கணிப்போம். கோயில் தர்மகத்தா மற்றும் அனைத்து வேலைகளையும் எதிர்க்கட்சியினருக்கு அவர் தருகிறார். கட்சியினரை அவர் மதிப்பதில்லை என ஆவேசமாக தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *