தூத்துக்குடி மாவட்டம் நாசரேத் தூய யோவான் பேராலய வளாகத்தில் உள்ள மர்காஷிஸ் மிஷனெரி நினைவிடத்தில் தென்காசி பங்களா சுரண்டையைச் சார்ந்த கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தினர் மரியாதை செலுத்தினர். கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தின் நிறுவன தலைவர் மன்னா செல்வகுமார் தலைமையில் விருதுநகர், சிவகாசி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சார்ந்த பல்வேறு வரலாற்று ஆர்வலர்கள் திருநெல்வேலி கதீட்ரல் பேராலயம் மற்றும் பல்வேறு மிஷனெரி பணித்தளங்களை பார்வையிட்ட பின்னர் நாசரேத் தூய யோவான் பேராலயத்திற்கு வருகை தந்தனர். மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் இயற்பியல் ஆசிரியர் ஜெர்சோம் ஜெபராஜ் அனைவரையும் வரவேற்றார்.

அதன் பின்னர், நாசரேத் தூய யோவான் பேராலயத்தின் வரலாறு மற்றும் அதன் சிறப்புகள் குறித்தும், மர்காஷிஸ் மிஷனெரி பணிகள் குறித்தும், மர்காஷிஸ் மேல்நிலைப்பள்ளியின் வரலாறு குறித்தும் அனைவருக்கும் எடுத்துரைத்தார். வருகை தந்த அனைவரும் தூய யோவான் பேராலயத்தில் வழிபட்ட பின்னர், மர்காஷிஸ் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சியில், கிறிஸ்தவ வரலாற்று சங்கத்தை சார்ந்த பொன்ராஜ், பிரின்ஸ் மற்றும் விருதுநகர் எவாஞ்சலிக்கல் யூனியன் தென் மண்டல தலைவர் சாலமன் பீட்டர் மற்றும் நிர்வாகிகள் பரமாத்மா, ஜான் வில்சன் மற்றும் மதியழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
