• Fri. Dec 19th, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி..,

ByT. Balasubramaniyam

Dec 19, 2025

அரியலூர் மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டார்.

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி (Special Intensive Revision – SIR) 04.11.2025 அன்று முதல் துவங்கி நடைபெற்று வருகின்றது. இதன் முதற்கட்ட பணியாக 27.10.2025 அன்றைய தேதியில் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களான ஆண்கள் –263113, பெண்கள் -267754, இதர –23 ஆக மொத்தம் -530890 நபர்களுக்கு கணக்கீட்டு படிவம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலமாக 04.11.2025 முதல் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்டு மீள பெறப்பட்ட படிவங்களில் இடம் பெற்றிருந்த வாக்காளர்களுக்கு வரைவு வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டு 19.12.2025 இன்று அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் முன்னிலையில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டரால் வெளியிடப்படுகிறது.

இதன்படி அரியலூர் மாவட்டத்திலுள்ள 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 1,25,652 ஆண் வாக்காளர்களும், 1,26,668 பெண் வாக்காளர்களும், 13 இதர வாக்காளர்களும் மொத்தம் 2,52,333 வாக்காளர்கள் உள்ளனர். மேலும் 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 1,26,324 ஆண் வாக்காளர்களும், 1,27,855 பெண் வாக்காளர்களும், 10 இதர வாக்காளர்களும், மொத்தம் 2,54,189 வாக்காளர்கள் உள்ளனர். மாவட்டத்தின் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5,06,522 ஆகும்.

சிறப்பு தீவிர திருத்த கண்க்கெடுப்பு பணியின் போது 27.10.2025 அன்று இடம் பெற்றிருந்த வாக்காளர்களில், 149 – அரியலூர் சட்டமன்ற தொகுதியில் 6211 வாக்காளர்கள் இறப்பு, 4652 நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 1388 கண்டறிய இயலாதவர்கள், 713 இரட்டை பதிவு, 22 இதர என மொத்தம்-12986 வாக்காளர்களும், 150 – ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் 6082 வாக்காளர்கள் இறப்பு, 4159 நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்கள், 333 கண்டறிய இயலாதவர்கள், 799 இரட்டை பதிவு, 9 இதர என மொத்தம் -11382 வாக்காளர்கள் என கண்டறியப்பட்டு அவர்களின் பெயர்கள் இந்த வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெறவில்லை.

வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு முன்பு 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 306 வாக்குச்சாவடிகளும், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 290 வாக்குச்சாவடிகளும், வாக்குச்சாவடி மறுசீரமைப்புக்கு பின்பு 149-அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் 24 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 330 வாக்குச்சாவடிகளும், 150-ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் 30 வாக்குச்சாவடிகள் புதிதாக உருவாக்கப்பட்டு 320 வாக்குச்சாவடிகளும் என மொத்தம் 650 வாக்குச்சாவடிகள் உள்ளது.

01.01.2026 நாளை தகுதி நாளாகக் கொண்டு 2026-ஆம் ஆண்டில் 18-வயது பூர்த்தியடைந்த அனைவரும் தங்கள் பெயரினை சேர்க்கவும், வாக்காளர்களின் பெயர், வயது மற்றும் இதர வகைகளில் உள்ள பிழைகளை திருத்தம் செய்வதற்குரிய படிவங்களை அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகம், வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகத்தில் 19.12.2025 முதல் 18.01.2026 வரை படிவங்களை பெற்று, அப்படிவங்களை பூர்த்தி செய்து வழங்கிடலாம் என தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்திய தேர்தர் ஆணையத்தின் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தின் மூலமாகவும், ECINET மொபைல் செயலி மூலமாகவும் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

சிறப்பு தீவிர திருத்த கணக்கெடுப்பு பணியின் போது இறந்தவர்கள், கண்டறிய இயலாத/ முகவரியில் இல்லாத வாக்காளர்கள் (Absent), இடம் பெயர்ந்தவர்கள் (Shifted) மற்றும் இரட்டை பதிவு வாக்காளர்கள் (ASDD) என கண்டறியப்பட்ட வாக்காளர்களின் விவரங்களையும், மற்றும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுடன் (BLAs) ASD பட்டியல் வழங்கிய போது நடத்தப்பட்ட கூட்ட நடவடிக்கைகளையும் அணுகுவதற்கான வசதி அரியலூர் மாவட்ட தேர்தல் அலுவலரின் https://ariyalur.nic.in என்ற இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் மேற்கண்ட வசதியினை பயன்படுத்தி தங்களது விபரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்படுகிறது.

சிறப்பு தீவிர திருத்த பணியில் நடைபெற்று வரும் பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர்களால் அவ்வப்போது அங்கீகிரக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கூட்டம் நடத்தப்பட்டு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

மேலும், இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, உரிமை கோரல் மற்றும் ஆட்சேபணை (Claims and Objections) காலம் 19.12.2025 முதல் 18.01.2026 வரையும், அறிவிப்புக் கட்டம் (Notice Phase) 19.12.2025 முதல் 10.02.2026 வரை நடைபெறும். வாக்காளரின் அனைத்து உரிமை கோரல்கள் மற்றும் ஆட்சேபணைகள் பரிசீலிக்கப்பட்ட பின், இறுதி வாக்காளர் பட்டியல் 17.02.2026 அன்று வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் மாவட்ட அளவில் 04 ஆய்வுக் கூட்டங்களும், வருவாய் கோட்டங்களில் 04 ஆய்வு கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அரியலூர் மாவட்ட வருவாய் அலுவலர் க.ரா.மல்லிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) பரிமளம், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் பிரேமி, உடையார்பாளையம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்ஷீஜா மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், இதர அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.