நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வளர்ச்சி பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (08.10.2025) செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் மியான்தெரு, திருப்பள்ளி தெரு, கீழ பட்டினச்சேரி சாலை, தைக்கால் தெரு, மனோர வடக்கு தெரு, சையது பள்ளிவாசல் தெரு, பொறையாத்தாத் தெரு ஆகிய தெருக்களில் நகர்ப்புற சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் 15 வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் சிமெண்ட் சாலை மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட நாகூர் பகுதியில் 15வது நிதிக்குழு மானியம் திட்டத்தின் கீழ் ரூ. 40 இலட்சம் மதிப்பீட்டில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும், ரூ. 125 இலட்சம் மதிப்பீட்டில் பேவர் பிளாக் சாலை பணிகள் நடைபெறுவதையும், மேலும், நாகப்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட இடத்தில் அரசு சார்பில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நலத்துறை மூலம் கிறிஸ்தவர்களுக்கான கல்லறை தோட்டம் அமைப்பதற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இடத்தில் ரூ. 32 இலட்சம் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிகள் நடைபெறவுள்ளதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதனை தொடர்ந்து, கீழையூர் ஊராட்சி ஒன்றியம் திருப்பூண்டி கிழக்கு ஊராட்சி (காமேஸ்வரம்) கடற்கறையில் நீலக்கொடி கடற்கறை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 4.00 கோடி மதிப்பீட்டில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கழிவறை வசதிகள், குளியலரை, சிறுவர்கள் பூங்கா, விளையாட்டு உபகரணங்கள், 250மீ தூரம் பேவர் பிளாக் நடைபாதை, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கல் அமைப்பு, அலுவலர் அறை போன்றவைகள் அமைக்கும் பணிகள் நடைபெறுவதையும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திருமதி கே.ஸ்ருதி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலர் திரு. கண்ணன், ஊரக வளர்ச்சி செயற்பொறியாளர் திரு.சீனிவாசன், நாகப்பட்டினம் நகராட்சி ஆணையர் திருமதி.டி.லீனா சைமன், நகராட்சி இளநிலைபொறியாளர் திரு.கோ.நமச்சிவாயம், கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திரு. ஜவகர், திருமதி செபஸ்தியம்மாள், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் திருமதி கவிதா ராணி, திருமதி சுகந்தி மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளனர்.