நாகப்பட்டினம் நகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாகப்பட்டினம் மேலகோட்டைவாசல் பகுதியில் உள்ள நகராட்சிக்கு சொந்தமான உரகிடங்கில் கொட்டப்படும். அங்கு மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரிக்கப்படும். இவ்வாறு கொட்டப்படும் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளது.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் குப்பைகள் எரிந்து அதில் இருந்து வெளியேறும் புகைகள் அப்பகுதியில் வசிப்பவர்கள் இடையே பெரிய அச்சத்தை ஏற்படுத்தியது. நகர்மன்ற தலைவர் மாரிமுத்து உத்தரவின் பேரில் இரவோடு இரவாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதையடுத்து கடந்த இரண்டு தினங்களாக புகைகள் அதிகஅளவில் வெளியேறுகிறது.

காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாகப்பட்டினம் நகர பகுதி, அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் புகைகள் அதிக அளவில் பரவி அப்பகுதியில் வசிப்பவர்கள் இடையே மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என தெரிவித்தனர். இதையறிந்த தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் கவுதமன், நகர்மன்ற தலைவர் மாரிமுத்து, மாவட்ட திட்ட குழு உறுப்பினர் அண்ணாதுரை, நகர்மன்ற ஆணையர் லீனாசைமன் ஆகியோர் நேற்று சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்பகுதியில் தொடர்ந்து தீ விபத்து ஏற்பட காரணம் குறித்து தீயணைப்பு துறை அலுவலர்களுடன் ஆய்வு செய்தனர்.
பின்னர் அப்பகுதியில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற அதிரடியாக உத்தரவிட்டனர். மேலும் தீ பரவாமல் இருக்க நாகப்பட்டினம் தீயணைப்பு வாகனம், ஓஎன்ஜிசி தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட தீயணைப்பு வாகனங்களை வரவழைத்து தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். அதே போல் நாகப்பட்டினம், திருவாரூர் நகராட்சியில் உள்ள குடிநீர் கொண்டு செல்லும் வாகனங்களையும் வரவழைத்து அருகில் உள்ள தேவநதி வாய்க்காலில் செல்லும் தண்ணீரை மோட்டர் மூலம் உறிஞ்சி எடுத்து தீயணைப்பு வாகனங்கள் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். புல்டோசர் உதவியுடன் மேலும் தீ பரவாமல் இருக்க குப்பைகள் பிரித்து எடுக்கப்பட்டது. தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக தீஅணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.