நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, போலீசார் அவர்களைத் தேடி வருகின்றனர்.
நாகர்கோவில் தம்மாத்துக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சனத். இவரது மனைவி லாவண்யா. இவர், ஆன்லைன் மூலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு ஒரு புகார் மனு அனுப்பி உள்ளனர். அதில், சுங்கான்கடை பகுதியில் ஒரு வீட்டில் சாமி சிலைகள் வைத்து சுரேஷ்குமார் மற்றும் அசோக்குமார் ஆகியோர் பூஜை செய்வதோடு அருள் வாக்கு கூறி வருவதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நான் அங்கு சென்றேன். அப்போது அருள்வாக்கு கூறிய சாமியார்கள், தங்களுக்கு தெய்வீக சக்தி உள்ளதாகவும், நாகங்கள் வந்து தங்களுக்கு நாக கற்களை தந்து செல்வதாகவும் நம்பும் படி கூறினர். விலைமதிப்பற்ற இந்த நாககற்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்தால், நினைத்த காரியம் நடக்கும். ஐஸ்வர்யங்கள் பெருகும் என்றெல்லாம் கூறினர். இதை நம்பி அவர்களிடம் நாக கற்களை வாங்கினேன். சுமார் ரூ. 7 லட்சம் வரைக்கும் கொடுத்து அவர்களிடம் நாக கற்கள் வாங்கினேன். அவற்றை நீண்ட நாட்கள் வீட்டில் வைத்திருந்தும் எந்த காரியமும் நடக்கவில்லை. எனவே அந்த கற்களை, நகைக்கடைக்கு சென்று காண்பித்த போது, அவை சாதாரண கற்கள் என்பதும், விலை குறைவானவை என்பதும் நான் மோசடி செய்யப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. இது பற்றி விசாரித்த போது ஏராளமானோர் இது போன்று ஏமாந்து இருப்பது தெரிய வந்தது. எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனை தொடர்ந்து இரணியல் போலீசார் விசாரணை நடத்தினர். புகாரின் பேரில் சாமியார்கள் சுரேஷ்குமார் மற்றும் அசோக் குமார் மீது வழக்குப் பதிவு செய்தனர். அவர்களை தேடி சுங்கான் கடை சென்றபோது, 2 பேரும் அங்கு இல்லை. அவர்கள் வெளியூர் சென்றிருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் 2 சாமியார்களும் புகாருக்கு பயந்து தலைமறைவாகி இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். தொடர்ந்து அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.