• Mon. Jan 12th, 2026
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

பிளட் மணி-சிறப்பு பார்வை

சிவக்காத பிளட் ஒலிக்காத மணி

தயாரிப்பு – எம்பரர் என்டர்டெயின்மென்ட்
இயக்கம் – கே.எம் சர்ஜுன்
இசை – சதீஷ் ரகுநந்தன்
நடிப்பு – பிரியா பவானி சங்கர்,
கிஷார், ஷிரிஸ்
வெளியான தேதி – 24 டிசம்பர் 2021

வலைதளங்களில்(OTT) வெளியிடுவதற்கென்றே பிரத்யேகமாக சில படங்களைத் தயாரிக்கும் போது, அதை ஒரு திரைப்படம் போல பார்க்க வேண்டிய தாக்கத்தை அதன் இயக்குனர்கள் ஏற்படுத்த வேண்டும். ஆனால், அதற்கு மாறாக ஓடிடி படம் என்றால் இப்படித்தான் இருக்கும் என ஒரு வட்டத்துக்குள் சுருக்கி விடுகிறார்களோ என்ற எண்ணத்தை ‘பிளட் மணி’ படம் ஏற்படுத்துகிறது.
ஒரு செய்தி சேனல் செட், ஒரு ஜெயில் செட் என இரண்டே இரண்டு செட்களில் மொத்த படத்தையும் எடுத்து முடித்திருக்கிறார்கள்.

டிவி சீரியல்களுக்குக் கொஞ்சம் மேலாக, திரைப்படங்களுக்கு சற்று கீழாக என்ற தரத்தில் இந்தப் படம் அமைந்திருக்கிறது.தமிழ்நாட்டைச் சேர்ந்த அண்ணன் தம்பிகளான கிஷோர், அரவிந்த் செய்யாத ஒரு குற்றத்திற்காக குவைத் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் இருவருக்கும் மரண தண்டனை என அறிவிக்கிறது அந்நாட்டு அரசு. அவர்களை மரண தண்டனையில் இருந்து காப்பாற்ற, செய்தி சேனல் ஒன்றில் புதிதாக உதவி செய்தி ஆசிரியராக பணிக்குச் சேர்ந்த பிரியா பவானி சங்கர் போராடுகிறார்.

அவரது முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா, மரண தண்டனையில் இருந்து அண்ணன், தம்பிகள் தப்பினார்களா என்பதுதான் படத்தின் மீதிக் கதை.செய்தி சேனல் உதவி ஆசிரியராக பிரியா பவானி சங்கர். நிஜ வாழ்க்கையில் நடிகையாவதற்கு முன்பு செய்தி வாசிப்பளராக பணியாற்றியதால் அந்த அனுபவத்தை இந்தக் கதாபாத்திர நடிப்பில் வெளிப்படுத்தி இருக்கிறார். ஒரு பக்கம் சக பணியாளர்களின் கேலி பேச்சுக்கள், மறுபக்கம் செய்தி ஆசிரியரின் அழுத்தம் என பயணிக்கும் ஒரு கதாபாத்திரம். முடிந்தவரை இயல்பாக நடித்திருக்கிறார்.

பிரியாவிற்கு உதவி செய்யும் ஒரு கதாபாத்திரத்தில் ஷிரிஷ். இவருக்கு பெரிய முக்கியத்துவம் இல்லை. தூக்கு தண்டனை கைதியாக கிஷோர். தாய் இல்லாத தனது மகளை நினைத்து கதறி அழுகிறார். அவருடனேயே மற்றொரு கைதியாக இருக்கும் தம்பியாக அரவிந்த். கிஷோரின் அம்மாவாக ஸ்ரீலேகா ராஜேந்திரன் இரண்டே காட்சிகள் என்றாலும் அழ வைக்கிறார்.கிஷோர், அரவிந்த் இருவரும் எந்தக் குற்றமும் செய்யவில்லை என்பதை ஆரம்பத்திலேயே காட்டியிருந்தால் அவர்கள் மீது நமக்கு அனுதாபம் வந்திருக்கும்.

அவர்கள் செய்யாத குற்றம் பற்றிய விவரத்தை பின்னர்தான் காட்டுகிறார்கள். அதுவே படத்தை உணர்வுபூர்வமாக ரசிக்க தடையாக இருக்கிறது.பின்னணி இசை, ஒளிப்பதிவு, படத்தொகுப்பு எல்லாம் சுமார் ரகம்தான். ஜீ 5 ஓடிடி தளத்தில் இதற்கு முன்பு வெளிவந்த சில ஓடிடி படங்கள் கதையாகவோ அல்லது உருவாக்கத்திலோ ஒரு ரசனையுடன் இருக்கும். இந்த ‘பிளட் மணி’யில் அப்படி எதுவுமில்லை

பிளட் மணி – சிவக்கவும் இல்லை
மணி ஒலிக்கவும் இல்லை