நாகையில் பாஜக நிர்வாகிகள் கூட்டம் மாவட்ட தலைவர் விஜேந்திரன் தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலந்துகொண்ட பாஜக மாநில செய்தி தொடர்பாளர் வரதராஜன்
நிருபர்களை சந்தித்த போது கூறியதாவது:-
இந்திய பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்று 11 ஆண்டுகள் நிறைவு செய்து, 12- வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளார். சாலை, ரெயில்வே, விமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளை வலுப்படுத்தியதால், நாட்டின் கட்டமைப்பு 3 மடங்காக உயர்துள்ளது. காங்கிரஸ் ஆட்சிகாலத்தில் பொருளாதாரத்தில் 11 இடத்தில் இருந்த இந்தியா தற்போது 4- வது இடத்துக்கு முன்னேறி உள்ளது.

அதேபோல பாஜக ஆட்சி காலத்தில் ஏழை, எளிய மக்களுக்காக எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு உள்ளது. குறிப்பாக ஜல்ஜீவன், முத்ரா கடன் திட்டம் , நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு உள்ளிட்ட யாரும் எதிர்பாராத திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. தமிழக அரசியலில் அமித்ஷா அமைத்த தேர்தல் உத்தி பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அதன்படி அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும். இந்த தேர்தல் உத்தி மிகப்பெரிய வெற்றியை கொடுக்கும்.
திமுக கூட்டணியில் உள்ள ஒரு கட்சியுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. மற்றபடி வெளிப்படையாக சொல்லமுடியாது. இதைதான் மாநில தலைவர் நைனார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவேண்டும். சித்தாந்த ரீதியில் காங்கிரஸ், கம்யூனிஸ்டு கட்சிகளை தவிர யார்வந்தாலும் வரவேற்போம் என்றார்.