லட்சக்கணக்கான பக்தர்களின் அரோகரா எனும் பக்த கோஷங்களுக்கு மத்தியில் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் குடமுழுக்கு வெகு விமரிசையாக நடைபெற்றது

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மூலவர்கள் சுப்பிரமணிய சுவாமி, கற்பக விநாயகர், துர்க்கை அம்மன், சத்தியகிரீஸ்வரர், பவளக்கனிவாய் பெருமாள் திருஉருவங்கள் மலையின் அடிவாரப் பாறையில் குடைந்து வடிவமைக்கப்பட்ட குடவரை கோயிலாகும், 2 கோடியே 44 இலட்ச ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜூலை 10 ஆம் தேதி யாக சாலை பூஜைகள் நடைபெற்றது,

அதிகாலை 5.25 மணியிலிருந்து காலை 6.10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது, அதன்படி 125 அடி உயரம் கொண்ட இராஜகோபுரத்தில் உள்ள 7 கலசங்களில் புனித நீர்கள் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற்றது, இராஜகோபுரரத்தை தொடர்ந்து வல்லப கணபதி, கோவர்த்தனாம்பிகை, பசுபதீஸ்வரர் ஆகிய மூன்று விமானங்களுக்கு புனித நீர்கள் ஊற்றப்பட்டன, திருப்பரங்குன்றம் முருகனுக்கு அரோகரா எனும் விண்ணை பிளக்கும் பக்த கோசங்களின் மத்தியில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மீனாட்சி சுந்தரேசுவரர் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலில் எழுந்தருளினார்கள், 75 யாக குண்டங்களில் ஜுலை 10 ஆம் தேதி தொடங்கிய யாகசாலை பூஜைகள் இன்று அதிகாலை வரை எட்டு காலங்களாக நடைபெற்றது. யாக சாலைகளில் வைத்து வழிபாடு நடத்திய புனித நீர்கள் கோபுர கலசங்களில் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது, பின்பு மூலவர்களுக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.

பக்தர்கள் மீது 10 ட்ரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, எம்.எல்.ஏ ராஜன் செல்லப்பா மற்றும் உயர்நீதிமன்ற நீதிபதிகள் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்டனர், ஊரின் அனைத்து பகுதிகளிலும் ஒலிபெருக்கிகள் மூலம் பக்தி பாடல்கள், திருப்புகழ் முற்றோதுதல், பன்னிரு திருமுறை தமிழ் வேத பாராயணம், தவில், நாதஸ்வர இசை ஒலிபரப்பப்படுகிறது. யாகசாலை பூஜை துவங்கியவுடன் சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் ஒலிபரப்பப்படுகிறது.
ராஜகோபுரம், கோயிலின் முன் பகுதி 16 கால் மண்டபம் என கோவிலின் அனைத்து பகுதிகளும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் வசதிக்காக 27 எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டது, திருக்கோவில் மேற்புறத்தில் 1,700 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டது, கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரை மாநகர காவல்துறை சார்பில் 3,000 காவலர்கள் பாதுகாப்பு பணியினை மேற்க் கொண்டு வருகிறார்கள், திருப்பரங்குன்றம் பகுதியில் உள்ள திருமண மண்டபங்களில் கும்பாபிஷேகத்திற்கு வருகை தரும் பக்தர்களுக்காக உணவுகள் வழங்கப்படுகின்றது.
