• Mon. Mar 17th, 2025

பா.ஜக கூட்டணியில் டிடிவி, ஓபிஎஸ் இணைத்ததன் பின்னணி

Byவிஷா

Mar 13, 2024

பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் இருவரையும் இணைத்ததற்கான பின்னணியாக தேவர் சமூக மக்களின் வாக்குகள் பாஜக பக்கம் திரும்புவதற்காகவே என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
பாஜக கூட்டணியில் டி.டி.வி தினகரன், ஓபிஎஸ் இடம் பெற்றிருப்பது தேவர் சமூக வாக்குகளை சிந்தாமல் சிதறாமல் அப்படியே பாஜக பக்கம் அள்ளிவிட முடியுமாம். கடந்த 2021 ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட டிடிவி தினகரன் கோவில் பட்டி தொகுதியில் மட்டும் 56,153 வாக்குகள் பெற்றுள்ளார். 2019 ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த வேட்பாளர் எம். புவனேஷ்வரன் 76,866 வாக்குகள் பெற்று 3ம் இடத்தை பிடித்தார். ஆகவே, தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் அமமுக விற்கு மட்டும் என்றே தனியாக சமார் 1 லட்சம் வாக்குகள் உள்ளன. ஓபிஎஸ் அணிக்கு கணிசமாக 30 முதல் 50 ஆயிரம் வாக்குகள் பெறலாம். அதுபோக பசும்பொன் முத்துராமலிங்க தேவர் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் தலைவர் இசக்கிராஜா தேவர் உள்ளிட்ட தேவர் அமைப்பை சார்ந்தவர்கள், “கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தனது சுயலாபத்திற்க்காக மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவிதமாக எந்த கணக்கீடும் புள்ளிவிவரங்களும் இல்லாமல் குறிப்பிட்ட சமுதாயத்திற்கு தாரை வார்த்தார். எனவே அவருக்கு தேவர் சமூகம் ஒரு போதும் ஆதரவு அளிக்க மாட்டோம் என்று கூறிவருவதால்”, அந்த வாக்குகளும் பாஜகவின் பக்கமே சேர்ந்துள்ளது. ஆகவே தூத்துக்குடி மாவட்டத்தில் சுமார் 2 லட்சம் வாக்குகள் வரை தேவர் சமூக வாக்குகள் பாஜக பக்கம் கரை சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தேவேந்திர குலத்தினர் நன்றி உடையவர்கள். தேவேந்திரகுல வேளாளர்களுக்காக அரசாணை பிறப்பித்ததன் அடிப்படையில் நன்றியின் விசுவாசமாக 80சதவிகத விழுக்காடு தேவேந்திரகுல மக்கள் பாஜகவிற்கு வாக்களித்து வருகின்றனர். எனவே இம்மக்கள் எப்போதும் பாஜகவிற்கு உறுதுணையாக இருப்பர் என்கிறார் தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன். ஆகவே அம்மக்களின் வாக்குகளும் கிளியர்.
கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிகளில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய நாயுடு மற்றும் ரெட்டியார் சமூக மக்கள் கணிசமானோர் பாஜகவில் உள்ளனர். மேலும் ராதிகா சரத்குமார் நாயுடு சமூகத்தை சேர்ந்தவர் என்பதால், பாஜக அல்லாத நாயுடு சமூக வாக்குகள் அவருக்கு விழ வாய்ப்புள்ளது. அதே போல் கோவில்பட்டியில் தினேஷ் ரோடியின் களப்பணி, பாஜக வாக்கு வங்கிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
அதே போல், நாடார் சமூகத்திற்கு என்று பல்வேறு அமைப்புகளும் கட்சிகளும் இருந்தாலும், சரத்குமாரின் ரசிகர் மன்றம் தொடங்கி, சமத்துவ மக்கள் கட்சி வரை இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை நாடார் சமூகத்தை சேர்ந்த ஒரு கூட்டம் இன்னமும் சரத்குமார் பின்னால் இருந்து வருகிறது. கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் மநீம கூட்டணியில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்ட சமக வேட்பாளர் சுந்தர் 10,534 வாக்குகளை பெற்றார். ஆகவே, ஒரு சட்டமன்ற தொகுதிக்கு 3 முதல் 5 ஆயிரம் என சரத்குமாருக்கு என்றே தனியாக வாக்குகள் உள்ளது. அந்த வகையில் 6 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்ந்து சுமார் 30 ஆயிரம் நாடார் சமூக வாக்குகள் சரத்குமாருக்கு மட்டுமே விழும்.
இவ்வாறு, நாடார், தேவர், தேவேந்திரகுல வேளாளர், நாயுடு என பெரும்பான்மை சமூக வாக்குகளை கருத்தில் கொண்டும், அவைகளை கனக்கச்சிதமாக அறுவடை செய்திட வேண்டும் என முனைப்போடு இருக்கும் பாஜக, அதற்கு, தூத்துக்குடி மக்களவை தொகுதிக்கு சரியான வேட்பாளர் ராதிகா சரத்குமார் என்று முடிவெடுத்துள்ளதாகவும், தேர்தல் சமயத்தில் தூத்துக்குடியில் தங்கி தேர்தல் பணியாற்றுவதற்கு ராதிகா சரத்குமாருக்கு வீடும் பார்க்கப்பட்டு முடிந்து விட்டதாகவும் சொல்லப்படுகிறது.