விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள தாயில்பட்டியில் கள்ளவெடி, கள்ளத்திரி, தடுப்பு நடவடிக்கைக்காக பொது மக்களுக்கான விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது.
சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் தலைமை வகித்தார், வெம்பக்கோட்டை இன்ஸ்பெக்டர் நம்பிராஜன் முன்னிலை வகித்தார். சப் இன்ஸ்பெக்டர்கள் செண்பகவேலன்,குருநாதன் மற்றும் தாயில்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள பட்டாசு ஆலை உரிமையாளர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் வீடுகளில் சட்டவிரோதமாக கள்ளத்திரி, கள்ளவெடிகள் தயார் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். சட்ட விரோதமாக பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீடுகளில் பட்டாசு தயாரிப்பில் ஈடுபடும் போது எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டால் அருகில் உள்ள வீட்டில் வசிப்பவர்களும் வெடி விபத்தால் மிகவும் பாதிக்கப்படுவார்கள். ஆகையால் பாதுகாப்பான பட்டாசு தொழிலில் ஈடுபட பட்டாசு ஆலைகளுக்கு நேரில் சென்று பணிபுரிய வேண்டும்.
குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டால் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம். சட்ட விரோதமாக பட்டாசு தொழிலை தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என சாத்தூர் போலீஸ் துணை சூப்பிரண்டு நாகராஜன் கூறினார்.