• Thu. Sep 11th, 2025
WhatsAppImage2025-08-28at1013221
WhatsAppImage2025-08-28at101324
WhatsAppImage2025-08-28at1013171
WhatsAppImage2025-08-28at101323
WhatsAppImage2025-08-28at101320
WhatsAppImage2025-08-28at101321
WhatsAppImage2025-08-28at101322
WhatsAppImage2025-08-28at101317
WhatsAppImage2025-08-28at1013191
previous arrow
next arrow
Read Now

சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் அங்கன்வாடி..,

BySeenu

May 2, 2025

கோவை சித்தாபுதூர் பகுதியில் ONGC(CSR) நிதியின் கீழ் சோலார் மற்றும் RO வாட்டர் வசதிகளுடன் கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த வானதி சீனிவாசன், ஒன்றரை மாத காலத்திற்கு மேலாக பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு பெற்ற நிலையில் தொகுதி பணிகள் மீண்டும் துவங்கப்பட்டுள்ளதாகவும் இன்று மட்டும் தெற்கு தொகுதியில் ONGC சமூக நீதியின் கீழ் 7 புதிய நவீன அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அங்கன்வாடி மையங்களுக்கு தெற்கு தொகுதியில் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருவதாக கூறினார். கோடைகாலத்தை முன்னிட்டு 14 இடங்களில் Water ATM அமைக்கப்பட்டு நாள்தோறும் 20லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில் அதனை தீவிர படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.

நடந்து முடிந்த கூட்டத்தொடரில் இந்த தொகுதியின் தேவைகள் பிரச்சனைகள் குறித்து முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சர்களும் பதில் அளித்துள்ளதாகவும் குறிப்பாக 350 கோடி இந்த தொகுதிக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக புள்ளி விபரங்கள் அளிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் முதலமைச்சரும் தகுந்த நேரத்தில் எங்களுடைய கேள்விகளுக்கு பதில் அளித்திருக்கிறார் என தெரிவித்தார்.

சாதிவாரி கணக்கெடுப்பு என்ற விஷயத்தை மத்திய அரசு அறிவித்துள்ளதை குறிப்பிட்ட அவர் அதன் வாயிலாக வரக்கூடிய நாட்களில் மக்களின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்க முடியும் என்று பாஜக நம்புவதாக தெரிவித்தார். திமுக கூட ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றியதை குறிப்பிட்ட அவர் தற்பொழுது மத்திய அரசே இதனை செயல்படுத்துவதற்கு முன் வந்துள்ளது என்பது பெரும்பாலான மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் என பார்ப்பதாக தெரிவித்தார்.

மத்திய அரசு எந்த திட்டத்தை அறிவித்தாலும் தேர்தலுக்கான அறிவிப்பு என்று கூறுவதால் தான் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற இலக்கை நோக்கி செயல்படுவதாக தெரிவித்தார். அடுத்து வரக்கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பில் பொருளாதாரம் முன்னேற்றம் என்பது முக்கியமானதாக இருக்கும் எனவும் தெரிவித்தார்.

CBSE பாடத்திட்டத்தில் No All Pass குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்திருந்த கருத்திற்கு பதில் அளித்த வானதி சீனிவாசன், தமிழக அரசு நடத்தக்கூடிய பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் எட்டாம் வகுப்பு ஒன்பதாம் வகுப்பு முடித்து செல்லும் பொழுது அந்த மாணவர்களால் ஒரு பக்கத்தை முழுமையாக படிக்க முடியவில்லை எளிமையான கணக்குகளை தீர்க்க முடியவில்லை என்று ஆய்வறிக்கைகள் கூறுவதாகவும், எனவே எங்காவது ஒரு தேர்வு என்பது கட்டாயமாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

அமைச்சர் கூறுவது போல் என்றால் 10ம் வகுப்பு 12ஆம் வகுப்பு பொது தேர்வு எல்லாம் இல்லாமல் அனைவரையும் தேர்ச்சி பெற வைத்து சென்றுவிடலாமே என தெரிவித்த அவர் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரின் கருத்து என்பது ஒட்டுமொத்தமாக தேர்வுகளே வேண்டாம் என்று கூறுகிறாரா? என கேள்வி எழுப்பினார். மாணவர்கள் இடைநீற்றல் அதிகம் இல்லாமல் இருப்பதற்கு வேறு வழி ஏதாவது இருக்கிறதா என்பதை தான் பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். பணியாளர்கள் தேவைப்படும் அளவிற்கு Skill இல்லையென்றும், நம்முடைய இளைஞர்களுக்கு Skill களை அதிகப்படுத்த வேண்டும் என்றும் என்றார்.

தமிழ்நாட்டில் அரசாங்க பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு என்பது குறைந்து கொண்டே வருவதாகவும் தனியார் பள்ளிகளில் குழந்தைகள் சேர்ப்பு என்பது அதிகரித்துக் கொண்டே வருவதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டை பிற மாநிலங்களுடன் குறிப்பாக வடமாநிலங்களுடன் ஒப்பிட வேண்டாம் என கேட்டுக்கொண்ட அவர் கிட்டத்தட்ட 40 வருடங்கள் பின் தங்கிய மாநிலங்கள் தற்பொழுது தான் வளர்ச்சி அடைந்து வருவதாக தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் உள்ள பெற்றோர்கள் நீட் தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக் கொண்டே வருவதாகவும், இதன் மூலம் நீட் தேர்வை மாணவர்கள் ஏற்றுக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். சமுதாயத்தில் தற்போது நீட் தேர்வு ஏற்றுக் கொண்டு விட்டதாக தெரிவித்தார். நீட் தேர்வு என்பது திமுக மற்றும் கூட்டணிகளுக்கு தான் அரசியல் பிரச்சினையே தவிர்த்து மக்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என தெரிவித்தார்.

கோவை மாவட்டத்திற்கு பொறுப்பு அமைச்சர் இல்லாதது பற்றி திமுக தான் யோசிக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் அவரது அமைச்சரவை சகாக்களை மாற்றிக் கொண்டே இருக்க வேண்டிய சூழல் இனிவரும் காலங்களில் அதிகமாக நடைபெறும். குறிப்பாக அடுத்து வரக்கூடிய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழக அமைச்சரவையில் இருக்கக்கூடிய அமைச்சர்களில் எத்தனை பேர் அமைச்சர் என்கின்ற அடைமொழியே இல்லாமல் மக்களை சந்திக்கப் போகிறார்கள் என்பதை ஒரு வருடத்தில் பாருங்கள் என தெரிவித்தார்.

கோவையில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சி குறித்தும் அதில் விஜய் பேசியது குறித்துமான கேள்விக்கு பதில் அளித்த அவர், சினிமா பின்புலத்தில் இருந்து வரக்கூடிய நபர் என்பதால் சாதாரணமாகவே அவரை பார்ப்பதற்கு ஆர்வம் வரும். அரசியல் கட்சியாக மக்களின் பிரச்சினைகளை எவ்வாறு கையில் எடுக்கிறார்கள் உள்ளூர் மக்களின் குரலை எவ்வாறு பிரதிபலிக்கிறார்கள் என்பது எல்லாம் அரசியல் கட்சிகளுக்கு அடிப்படை. எனவே வரக்கூடிய காலத்தில் அதனை பார்க்கலாம் என தெரிவித்தார்.

ஒவ்வொரு நாளும் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் சட்ட மன்றத்தில் அவர்கள் அளித்துள்ள அறிக்கைகளே தெரிவிக்கிறது என தெரிவித்த அவர் அரசாங்கம் இவற்றுக்கெல்லாம் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக போதைப் பொருள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். போதை பொருட்கள் வடமாநிலங்களில் இருந்து வந்தாலும் சரி வெளிநாடுகளில் இருந்து வந்தாலும் சரி யார் தவறு செய்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்..

கூட்டணி குறித்து ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது ஆனால் எத்தனை தொகுதி யார் வேட்பாளர்கள் என்பதை எல்லாம் நாங்கள் அறிவிக்க முடியாது தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.

சாதி வாரி கணக்கெடுப்பு என்னால் தான் அறிவிக்கப்பட்டது என்று முதலமைச்சர் கூறியிருப்பது குறித்தான கேள்விக்கு பதில் அளித்த அவர், யாரோ கஷ்டப்பட்டு குழந்தையை கொண்டு வந்து கொடுத்தால் பெயர் வைப்பது என்ன கஷ்டம்? என்பது போல் இருப்பதாக சாடினார்.