கன்னியாகுமரியில் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகு தளம் விரிவாக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில் மீனவர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் என கூறினர். இப்பகுதி மீனவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கும் நிலையில் 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் அடங்கிய போராட்ட குழு அமைக்கப்பட்டது.

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில் 1972 ஆம் ஆண்டு சுவாமி விவேகானந்த மண்டபம் திறக்கப்பட்டது. இந்த மண்டபத்திற்கு தமிழக அரசின் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் படகு சேவையை நடத்தி வருகிறது.
இதற்காக கன்னியாகுமரி வாவத்துறையில் ஒரு படகு தளமும், விவேகானந்த பாறையில் ஒரு படகு தளமும் அமைக்கப்பட்டு படகு சேவை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2000 ஆம் ஆண்டில் குமரிக் கடலில் உள்ள மற்றொரு பாறையில் 133 அடி திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டது. தற்போது விவேகானந்தர் மற்றும் திருவள்ளுவர் ஆகிய இரண்டு நினைவு சின்னங்களையும் இணைக்கும் வகையில் 38 கோடி ரூபாய் செலவில் கடல் நடுவே கண்ணாடி பாலமும் அமைக்கப்பட்டு உள்ளது. கண்ணாடி பாலத்தை கடந்த டிசம்பர் 31 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
படகு சேவை மூலம் சுற்றுலா பயணிகளை அழைத்து செல்வதற்கு மூன்று படகுகள் செயல்பட்டு வருகின்றன. தற்போது நாளுக்கு நாள் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருகின்றனர் இதன் காரணமாக கூடுதலாக மூன்று படகுகள் வாங்கப்படும் என தமிழக முதல்வர் கன்னியாகுமரியில் நடைபெற்ற திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழாவில் அறிவித்தார்.

இந்நிலையில் கன்னியாகுமரி கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் பாறையை ஒட்டி உள்ள படகு தளத்தை 14 கோடி ரூபாய் செலவில் விரிவு படுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்து இதற்கான பணிகள் நடந்து வருகிறது.
தற்போது 20 மீட்டர் நீளத்தில் உள்ள இந்த படகு துறையை 106 மீட்டர் நீளத்திற்கு விரிவுபடுத்தி கூடுதலாக மூன்று படகுகள் நிறுத்தும் வகையில் திட்டம் தயார் செய்து செய்யப்பட்டு பணிகள் துவங்கியுள்ளன.
இந்நிலையில் இந்த படகு தளம் விரிவு படுத்தப்பட்டால் தங்களின் மீன் பிடி தொழில் பாதிப்புக்கு உள்ளாகும். தங்களது வாழ்வாதராம் முற்றிலும் பாதிப்பு அமையும் என்று கன்னியாகுமரி, வாவத்துறை பகுதி மீனவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக பல்வேறு அதிகாரிகளை சந்தித்தும் தீர்வு கிடைக்காததால் கடந்த 13 ஆம் தேதி இதுகுறித்து நாகர்கோவில் ஆர்டிஓ காளீஸ்வரி தலைமையில் ஒரு சமாதான கூட்டம் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் பொதுப்பணித்துறை, ஐஐடி நிபுணர்கள், வருவாய்த்துறை அதிகாரிகள், காவல்துறை , மீன் துறை அதிகாரிகள், மீனவ சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் எவ்வித முடிவும் எட்டப்படவில்லை.
இந்நிலையில் நேற்று கன்னியாகுமரியில் இப்பிரச்சினை தொடர்பாக ஆலோசித்து முடிவு செய்வதற்காக 9 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றது. கன்னியாகுமரி, வாவத்துறை, சிலுவை நகர், கோவளம், ஆரோக்கியபுரம், சின்னமுட்டம், கீழமணக்குடி, மேலமணக்குடி, புதுக்கிராமம் ஆகிய 9 கடலோர கிராமங்களை சேர்ந்த பங்கு ஊர் நிர்வாகிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கன்னியாகுமரி, வாவத்துறை, புதுக்கிராமம், கோவளம் ஆகிய ஊர்களை சேர்ந்த பங்கு தந்தைகளும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் முதற்கட்டமாக கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இப் பிரச்சனை தொடர்பாக விளக்கி அவர்களுடைய ஆதரவை பெறுவது என முடிவு செய்யப்பட்டது.
மேற்கண்ட 9 ஊர்களை சேர்ந்த நிர்வாகிகள் அடங்கிய போராட்ட ஒருங்கிணைப்பு குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இப்பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடு செய்ய முடிவு செய்யப்பட்டது.

இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த கூட்டத்தில் 9 கிராமங்களையும் சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வாவத்துறை மீனவ கிராமம் மக்களுக்கு கிட்டத்தட்ட 50_ ஆண்டுகளுக்கு முன். எம்.ஜு.ஆர்., முதல்வராக இருந்த காலையில் வந்த பிரச்சினை. கடற்கரையில் நிறுத்தி வைக்கப்படும்,கட்டு மரங்கள் மற்றும் சிறு படகுகளை நிறுத்தக்கூடாது,முழுவதுமாக அப்புறப்படுத்த மாவட்ட நிர்வாகம் முயன்ற போது வாவத்துறை மீனவர்கள் ஒன்று பட்டு அரசிற்கு எதிரான போராட்ட அறிவிப்பு விட்ட உடனேயே அன்றைய எம்.ஜு.ஆர் அரசு அந்த திட்டத்தை கைவிட்டது.
வாவத்துறை மீனவர்கள் 50_ ஆண்டுகளுக்கு முன் எதிர் பட்ட இன்னல் இப்போது படகுதுறை என்ற நிலையில் புது வடிவத்தில் வந்துள்ளது.