• Mon. Sep 22nd, 2025
WhatsAppImage2025-09-12at0142046
WhatsAppImage2025-09-12at0142042
WhatsAppImage2025-09-12at014204
WhatsAppImage2025-09-12at0142041
WhatsAppImage2025-09-12at0142045
WhatsAppImage2025-09-12at0142047
WhatsAppImage2025-09-12at0142048
WhatsAppImage2025-09-12at0142044
WhatsAppImage2025-09-12at0142043
previous arrow
next arrow
Read Now

ஜூலை டூ டிசம்பர் மாதம் ஒரு மந்திரி ஆபரேஷன்!

ஜூலை எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் கே.சி.வீரமணி, அக்டோபர் சி.விஜயபாஸ்கரை தொடர்ந்து நவம்பரில் ரெஸ்ட், டிசம்பரில் தங்கமணி மீது ரெய்டு தொடர்கிறது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களின் ஊழல் விபரங்கள் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரங்களின்போது உறுதியளித்தார். இதனை தொடர்ந்து கடந்த மே மாதம் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றார் மு.க.ஸ்டாலின். அதன் பின்னர் தேர்தலில் அளித்த வாக்குறுதிபோல் அடுத்தடுத்து முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

எம்.ஆர்.விஜயபாஸ்கர் – போக்குவரத்துறை முன்னாள் அமைச்சர்

இதில் முதலில் சிக்கியவர் போக்குவரத்துத்துறை முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர். அவர் வருமானத்துக்கு 55 சதவீதத்துக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஜூலை மாதம் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2016 ஆம் ஆண்டு ரூ.2.51 கோடியாக இருந்த சொத்து, 2021ல் ரூ.8.62 கோடியாக அதிகரித்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத் துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர். கரூர் மற்றும் சென்னையில் உள்ள அவரது வீடுகள், அலுவலகங்கள், அவருக்கு தொடர்புடைய இடங்கள் என 20 இடங்களிலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் ரூ.25.56 லட்சம் ரொக்கம், சொத்து ஆவணங்கள், காப்பீட்டு நிறுவன முதலீடுகள், நிறுவனங்களில் செலுத்தப்பட்ட, பெறப்பட்ட பண பரிவர்த்தனைகள் போன்ற முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.

எஸ்.பி.வேலுமணி – உள்ளாட்சித் துறை முன்னாள் அமைச்சர்

இவருக்கு அடுத்தபடியாக கடந்த ஆகஸ்டு மாதம், அதிமுகவின் மாஸ்டர் மைண்ட் என்று அழைக்கப்படக் கூடிய பலம் அமைச்சராக வலம் வந்த எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை மேற்கொண்டது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி சென்னை, கோவை மாநகராட்சி ஒப்பந்த பணிகளில் முறைகேடு செய்ததாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவரது வீடு, அலுவலகம் என கோவையிலும், சென்னையிலும் 60 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
அதிமுக தலைமை விவகாரத்தை அருகில் இருந்து கவனித்துக் வந்தவரும், மத்திய அரசுடன் நெருக்கமானவராகவும் இருந்த எஸ்.பி.வேலுமணி வீட்டில் சோதனை நடத்தப்பட்டது அதிமுக தலைமையை ஆட்டம் காண வைத்தது. இந்த சோதனையில் ரூ.13,08,500 பணம், நிலப்பதிவு தொடர்பான ஆவணங்கள், ரூ.2 கோடி வைப்புத் தொகை, மாநகராட்சி தொடர்பான அலுவல்ரீதியான ஆவணங்கள், ஹார்ட் டிஸ்டுகள், முக்கியமான லாக்கர் சாவி ஒன்றும், வங்கிக் கணக்கு குறித்த ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

கே.சி.வீரமணி, வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர்

அடுத்ததாக கடந்த செப்டம்பர் மாதம் அதிமுகவை சேர்ந்த வணிகவரித்துறை முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தப்பட்டது. ரூ.28.78 கோடி அளவுக்கு வருமானத்துக்கு அதிகமாக 654 மடங்கு சொத்துகள் வாங்கி குவித்துள்ளதாக அவர் மீது வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் இவரின் சொத்து மதிப்பு 7 கோடி ரூபாயில் இருந்து 76.65 கோடி ரூபாய் வரை உயர்ந்து இருக்கிறது. இதையடுத்து அவருக்கு தொடர்புடைய 35 இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் எந்த ஆவணங்களும் சிக்கவில்லை.

சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை முன்னாள் அமைச்சர்

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் அமைச்சராக இருந்த போது மனைவி மற்றும் மகள்கள் பெயரில் சொத்துகள் வாங்கி குவித்ததாக புகார்கள் எழுந்தது. இதனையடுத்து இவர் மீதும் இவர் மனைவி ரம்யா மீதும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, திருச்சி, புதுக்கோட்டை என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான 43 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினர்.

தங்கமணி, முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர்:

முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நெருக்கமாகவும், அவரது இடது கரமாக விளங்கிய முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணிக்கு சொந்தமான 69 இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். ஈரோடு, நாமக்கல், சென்னை என பல்வேறு இடங்களில் அந்த சோதனை நடந்து வருகிறது.

ஜூலை மாதம் எம்.ஆர்.விஜயபாஸ்கர், ஆகஸ்டு மாதம் எஸ்.பி.வேலுமணி, செப்டம்பர் மாதம் கே.சி.வீரமணி, அக்டோபர் மாதம் சி.விஜயபாஸ்கர் என அடுத்தடுத்து மாதம் ஒருவர் என முன்னாள் அமைச்சர்கள் மீது ரெய்டு நடந்து வந்தது. நவம்பர் மாதத்தில் ரெஸ்டு விட்டு, தற்போது டிசம்பர் மாதத்தில் தங்கமணி வீட்டில் ரெய்டை தொடங்கியுள்ளனர்.