• Tue. Dec 2nd, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு பிரச்சனை கடந்து வந்த பாதை

தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்பு போராட்டத்திற்கு பிறகு நடந்த போராட்டம் 1987 ம் ஆண்டு தனி இட ஒதுக்கீடு கேட்டு வன்னியர் சங்கம் நடத்தியது தான்.50 சதவீத இட ஒதுக்கீட்டில் பொருளாதார ரீதியாக முன்னேறிய சமூகங்களுடன் போட்டியிட முடியவில்லை.அதனால் மக்கள் தொகைக்கு ஏற்ப 20சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று வன்னிய சங்கத்தினர் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அன்று ஆட்சியில் இருந்த எம்.ஜி.ஆர். தலைமையிலான அதிமுக அரசுக்கு இந்த பிரச்சனை நெருக்கடியை ஏற்படுத்தியது

வன்னிய இட ஒதுக்கீடு போராட்டத்தை முன்னெடுத்துச்சென்றவர் பாமகவின் நிறுவனரான டாக்டர் ராமதாஸ் தான்.1986ல் வடதமிழகம் முழுவதும் வன்னிய இட ஒதுக்கீடு பிரச்சனை காட்டுத்தீபோல பரவி சாலைமறியல், ரயில் மறியல் நடைபெற்றது. எம்.ஜி.ஆர் தலைமையிலான அதிமுக அரசு கோரிக்கையை ஏற்காமல் துணை ராணுவத்தை இறக்கியது.


இந்த போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிசூட்டில் 21 பேர் பலியாகினர், 18ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் உட்கட்சி மோதல் காரணமாக எம்.ஜி.ஆர் மறைவிற்கு பிறகு ஜானகி எம் ஜி ஆர் முதலமைச்சராக பொறுப்பேற்றார்.

ஜானகி எம் ஜி ஆரிடம் வன்னியர் சங்கத்தினர் கோரிக்கை முன் வைத்தனர்.ஆனால் அதுவும் வெகு நாட்கள் நீடிக்க வில்லை.அதிமுக அரசு கவிழ்ந்தது.1989ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலை வட தமிழகத்தில் வன்னியர் சங்கம் புறக்கணித்தது.அப்போது தான் வன்னியரின் ஓட்டு அந்நியருக்கு இல்லை என்ற முழக்கத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் முன்வைத்தார். சட்டமன்ற தேர்தலில் திமுக அரசு ஆட்சியை பிடித்து கருணாநிதி முதலமைச்சரானார். 1989ம் ஆண்டு வன்னியர் சங்க தலைவர்களை அழைத்து முதலமைச்சர் கருணாநிதி பேச்சு வார்த்தை நடத்தினார்.

மொத்தம் 50சதவீத இட ஒதுக்கீட்டில் தனியாக 20 சதவீதத்தை பிரித்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப்பிரிவை உருவாக்கினார்.இந்த 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னிய சமூகம் உள்பட 108 சமூகத்தினர் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெற்றனர். இதை தொடர்ந்து 20 சதவீத இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு மட்டும் 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என்று 2021ம் ஆண்டு பிப்ரவரி 26 ம் தேதி தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றியது .

இதை எதிர்த்து 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மதுரையை சேர்ந்த ஒருவர் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டிற்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது. இந்த 10.5 உள் ஒதுக்கீடு தேர்தலில் வெற்றி பெற அதிமுக அரசுக்கு பலமாக இருக்குமென்று எண்ணியது. ஆனால் தென் தமிழகத்தில் இது எதிரொலித்து திமுக வெற்றிக்கு வழிவகுத்தது. தென் தமிழகத்தில் ஓ.பி.எஸ் மீது அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் இதை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உயர்நீதிமன்றம் உத்தரவின் பேரில் உயர்நீதி மன்ற மதுரை கிளை இந்த வழக்கை விசாரித்தது. சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா, மாநில அரசுக்கு இட ஒதுக்கீடு வழங்க அதிகாரம் உள்ளதா என உயர்நீதி மன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியது.

மேலும் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு ரத்து செய்து, சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பிறகே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

அதன் பிறகு உச்ச நீதிமன்றத்தை அணுகிய போதும் தற்போது தீர்ப்பு பாமகவிற்கு எதிராக வந்துள்ளது. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு சரியானது தான் என அந்த தீர்ப்பை உறுதி செய்துள்ளது.